�
மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த விற்பனைச் சந்தையில் கரும்பின் விலை குறைந்துள்ளதால், கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.2,500 கோடி நிலுவையில் உள்ளது என அம்மாநில கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநில சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பின் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் கூறுகையில், “நியாய விலைப்படி கரும்பு ஆலைகளால் விவசாயிகளுக்கு ஒரு டன் ரூ.2,550 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு டன்னிலிருந்தும் 9.50 சதவிகிதம் சர்க்கரை எடுக்கப்படுகிறது. இதில் அதிகரிக்கும் ஒவ்வொரு சதவிகிதத்திற்கும் பிரீமியம் தொகையாக ரூ.280 வழங்கப்படுகிறது. கரும்பின் விலை மொத்த விற்பனைச் சந்தையில் குறைந்துகொண்டே வருவதால் ஆலைகளால் விவசாயிகளுக்கு பணம் செலுத்த முடிவதில்லை.
கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்திலிருந்து 183 கூட்டுறவு மற்றும் தனியார் கரும்பு ஆலைகள் கரும்பு நசுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளன. நடப்பாண்டின் ஜனவரி மாத மத்தியில், கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு 480 லட்சம் டன் கரும்புகளுக்காக ரூ.10,500 கோடி வழங்க வேண்டியுள்ளது. ஆனால் ஆலைகள் இதுவரையில் ரூ.8,150 கோடி தொகையை மட்டுமே வழங்கியுள்ளன. ஏற்றுமதி சரிவு மற்றும் விலை குறைபாட்டினால் ஆலைகளால் விவசாயிகளுக்கு பணம் செலுத்த முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
பொதுவாகச் சர்க்கரை ஆலைகள் தங்களது முதல் தவணையை கரும்பு வாங்கும் போதும், மீதித் தொகையை இரண்டு அல்லது மூன்று தவணைகளிலும், மொத்தத் தொகையை மே மாதத்திற்குள்ளாகவும் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
�,