Wகதிராமங்கலத்தில் மணியரசன் கைது!

Published On:

| By Balaji

கதிராமங்கலம் மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து போராடியதால் அதிரடிப்படை போலீஸார் பொதுமக்கள்மீது தடியடி நடத்தினர். இதனால், கதிராமங்கலத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கே சென்ற தமிழ்த் தேதிய பேரியக்கத் தலைவரும் காவிரி மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் துரப்பணக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு எடுக்கப்படும் கச்சா எண்ணெயைப் பூமியில் குழாய் புதைத்து அதன்மூலம் குத்தாலத்தில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த எண்ணெய்க் கிணறுகளால் கதிராமங்கலத்தில் நிலத்தடி நீரும் விளைநிலங்களும் பாழாகிவிட்டதாக அந்தக் கிராம மக்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்தப் பகுதியில் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல குழாய்கள் புதைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தில் இரண்டாவது முறையாக குழாய்களைப் புதைத்து வருகிறது. இதற்கு கதிராமங்கலம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்தப் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனது திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஜூன் 30ஆம் தேதி கதிராமங்கலத்தில் பூமியில் புதைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கச்சா எண்ணெய் வெளியேறி விளைநிலங்களில் பாய்ந்து கொண்டிருந்தது. இதனால், அங்கே விபத்து ஏற்படுமோ என்று அஞ்சிய கதிராமங்கலம் மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்ட போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கலைக்க தடியடி நடத்தினர். தொடர்ந்து அங்கே போலீஸார் குவிக்கப்பட்டிருப்பதால் அங்கே பதற்றம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, நேற்று ஜூலை 1ஆம் தேதி, கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக அங்கே கடையடைப்பு நடைபெற்றது. கதிராமங்கலம் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவரும் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் கதிராமங்கலம் சென்றார். அவரைக் கதிராமங்கலத்துக்குள் செல்ல தடை செய்த காவல்துறை பெ.மணியரசனைக் கைது செய்தது. அவருடன் ஐயனார்புரம் முருகேசன், மணிமொழியன், பாரதிசெல்வன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கதிராமங்கலத்துக்குள் தொடர்ந்து அரசியல்கட்சி தலைவர்கள், அமைப்புகளை உள்ளே செல்ல விடாமல் போலீஸார் தடுத்து வருகின்றனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment