�பயங்கரவாதிகளையும், நக்சல்களையும் கடைசி காலம் வரை பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் நேற்று (மார்ச் 10) நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “பல ஆண்டுகளாக பயங்கரவாதமும், நக்சல்வாதமும் நமக்கு நிறைய வேதனைகளைக் கொடுத்துவிட்டன. புல்வாமாவிலும், யூரியிலும் நடந்த சம்பவங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. ஆனால் நண்பர்களே, நக்சல்கள் மற்றும் பயங்கரவாதிகளின் ஊடுருவலை நாம் நமது இறுதி காலம் வரை தாங்கிக் கொண்டிருக்க முடியாது.
இதுவரை நடந்த சம்பவங்களே மிக அதிகம். நடந்ததெல்லாம் போதும். சில நேரத்தில் யாராவது ஒருவர் மிகப்பெரிய தீர்மானத்தை எடுத்துதான் ஆக வேண்டும். கோடிக்கணக்கான இந்தியர்களின் சக்தியாலும், அவர்களின் நம்பிக்கையாலும் நாங்கள் சில வலுவான தீர்மானங்களை எடுத்துள்ளோம். இது எனது பாக்கியம். நாட்டின் கொள்கைக்கு நாங்கள் ஒரு புதிய பாதையைக் கொடுத்துள்ளோம். புதிய கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்
அண்டை நாட்டவர் பகைமையுடன் செயல்படுகின்றனர். ஆனால், அவர்களுக்குப் போர் புரிவதற்கான திறன் இல்லை. மேலும், உள்நாட்டில் உருவாகும் சதித் திட்டங்களுக்கு எல்லை கடந்து ஆதரவு கிடைக்கிறது. இத்தகைய கடினமான சூழல்களில் பயங்கரவாதத்தின் கோரமான முகம் வெளிப்படும்போது நாட்டின் பாதுகாப்பு மிகவும் சவாலாக அமைகிறது” என்று கூறினார்.�,