Wஓய்வை அறிவித்த `ஓய்வில்லா’ வீரர்!

Published On:

| By Balaji

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்ச ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அலெஸ்டர் குக், இந்தியத் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வரும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் அலெஸ்டர் குக் நடந்துவரும் இந்திய டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் ஏ பி டிவில்லியர்ஸின் ஓய்வுச் செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியைத் தந்ததோ, தற்போது இந்தச் செய்தியும் ரசிகர்களின் மனதில் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிரிக்கெட்டில் வெகுசிலர் மட்டுமே தங்களது தனிப்பட்ட ஆட்டத்திறனைக் கொண்டு உள்நாட்டு ரசிகர்களை மட்டுமல்லாமல் உலகளாவிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருப்பர். அந்தப் பட்டியலில் அலெஸ்டர் குக்கும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

2010/11ஆம் ஆண்டு ஆஷஸ் மற்றும் 2012/13ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணம் ஆகிய இரு தொடர்களிலும் அதிகபட்ச ரன்களைச் சேர்த்து, இந்தத் தொடர்களை இங்கிலாந்து வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் குக். கடந்த ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் இரட்டைச் சதம் அடித்து உச்சத்தில் இருந்த இவருக்கு இந்த ஆண்டு குறிப்பிடும்படி அமையவில்லை. இந்த ஆண்டில் இதுவரை இவர் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் இந்திய டெஸ்ட் தொடரில் இவரது ஆட்டம் மோசமான விமர்சனங்களைச் சந்தித்து வருவதால், இதுவே சரியான தருணம் எனக் கருதி குக், தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.

“கடந்த சில மாதங்களாக தொடர்ந்துவந்த சிந்தனைகள் மற்றும் விவாதங்களைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் தொடருடன் கிரிக்கெட் பயணத்திலிருந்து என் ஓய்வை அறிவிக்கிறேன். இது ஒரு சோகமான நாள்தான் என்றாலும்; என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிட்டு, நீரின்றி இருக்கும் தொட்டியைப் போல நான் இருப்பதை உணர்ந்து என் முகத்தில் மகிழ்ச்சியுடன் இதனை தெரிவிக்கிறேன்” என்று கூறிய குக்கின் வார்த்தைகள் நெகிழ வைத்தன.

கிரிக்கெட்டில் எந்தவொரு சாதனையும் நிரந்தரமல்ல. அனைத்துமே ஒருநாள் யாரோ ஒருவரால் முறியடிக்கப்படும். அப்படி இவர் அடித்த 32 டெஸ்ட் சதங்களையும், 12,254 டெஸ்ட் ரன்களையும் முறியடிக்க இன்னொரு இங்கிலாந்து வீரர் வரலாம். ஆனால் இவரது [இந்தவொரு சாதனையை முறியடிப்பது என்பது இங்கிலாந்து வீரர்களுக்கு மட்டுமல்ல எந்தவொரு நாட்டு வீரருக்கும் கடினமான ஒன்றாகும்](https://minnambalam.com/k/2018/05/25/81). ஓவல் மைதானத்தில் இவர் கடைசியாக விளையாடவிருக்கும் போட்டி டெஸ்ட் அரங்கில் இவரது 160ஆவது போட்டியாகும். இதில் சாதனை என்னவென்றால் 159 போட்டிகள் எந்தவொரு இடைவெளியும் இன்றி தொடர்ச்சியாக ஆடப்பட்டவை.

தற்போதைய சூழலில் குறுவடிவ போட்டிகளின் ஆதிக்கம், ஓய்வில்லாப் போட்டிகள், வீரர்களின் ஃபார்ம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைத் தாண்டி இன்னொருவர் இந்தச் சாதனையை முறியடிப்பது அரிதிலும் அரிது.

**-முத்துப்பாண்டி யோகானந்த்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share