�
ஆசியப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சரத் கமல், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா பதக்கம் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல், ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார். இந்நிலையில் சென்னை திரும்பிய சரத் கமல் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்வது என்பது ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு நெருக்கமான ஒன்றுதான். அதனைத் தீர்மானிப்பதற்கான மைல்கல்தான் இது. இந்தப் பதக்கம் ஒலிம்பிக்கில் கூட பதக்கமேடைக்கு செல்ல முடியும் என ஊக்கப்படுத்தும் அறிகுறியாகும். டேபிள் டென்னிஸில் சிறந்த 10 அணிகள் ஆசியாவில் இருந்துதான் வருகின்றன. இதனால் ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்வது பெரிய உத்வேகம்தான். இது ஒலிம்பிக் போட்டிக்கான முன்னோக்கு பார்வையைக் கொடுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தனிநபர், அணி மற்றும் கலப்பு இரட்டையர் என 3 பிரிவுகளுக்கும் நான் தகுதி பெற வாய்ப்புள்ளது. நான் உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் 2024ஆம் ஆண்டு வரை கூட விளையாடுவேன். காமன்வெல்த் போட்டி மற்றும் ஆசிய விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்குப் பெரிய உந்து சக்தியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
�,”