wஉலகக் கோப்பையைக் குறிவைக்கும் அணித் தேர்வு!

Published On:

| By Balaji

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கான 16 பேர் அடங்கிய இந்திய அணி நேற்று (செப்டம்பர் 1) அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் போட்டிகளில் விளையாடிவரும் விராட் கோலிக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலியின் ஓய்வு குறித்துப் பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், “நீண்ட நாட்களாகத் தொடர் போட்டிகளில் விளையாடிவரும் கோலிக்கு வேலைபளுவைக் குறைக்கும் பொருட்டு தற்போது அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவங்களிலும் ஆடக்கூடிய வீரர்களுக்குப் பணிச்சுமையைக் குறைக்கவே இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடித்திருந்த அம்பத்தி ராயுடு, யோயோ தேர்வில் தோல்வியடைந்ததால் அந்தத் தொடரிலிருந்து கழற்றிவிடப்பட்டிருந்தார். தற்போது யோயோ தேர்வில் தேர்ச்சியடைந்து இந்தியா ஏ அணிக்காக விளையாடிவரும் அவர், மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல் இந்திய பி அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மனிஷ் பாண்டேவுக்கு அணியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கேதார் ஜாதவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு இம்முறை அணியில் இடம் கிடைக்கவில்லை.

இவர்களுடன் ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயதான கலீல் அஹமதும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 17 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் 4.74 எகானமியுடன் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2016ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அணியில் விளையாடிய கலீல் அதன்பிறகு ராகுல் திராவிட்டின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார். முன்னதாக தேர்வுக் குழுவினர் ஜெயதேவ் உனாட்கட், பரிந்தர் ஷ்ரன் ஆகியோரைக் கொண்டு நடத்திய பரிசோதனைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் தற்போது கலீலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கலீல் அஹமதின் தேர்வு குறித்துப் பேசிய பிரசாத், “உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இன்னும் 2-3 இடங்கள் காலியாக உள்ளன. அதில் ஒன்றுதான் இடக்கை வேகப்பந்து வீச்சாளருக்கான இடம். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து பேசிய பிரசாத், “கடந்த 10-12 மாதங்களாக மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியில் வெகு விரைவில் அவர் இடம்பிடிப்பார். உள்ளூர் போட்டிகளில் அனைத்து வடிவத்திலும் சிறப்பாக ஆடி வருகிறார். இனிவரும் தொடர்களில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்” என்று கூறியுள்ளார்

**ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி**

ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவன் (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சஹால், அக்ஷர் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஷ்ரத்துல் தாக்கூர், கலீல் அஹமது .

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share