நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஒப்புதல் வழங்க நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் அடுத்த வாரம் ஐசிசி கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய விதிகள், போட்டிகள் குறித்து பல விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளதாகவும், இவ்விஷயங்களில் இறுதி முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட நாட்களாக முடிவெடுக்கப்படாமல் இருக்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து இந்த வார இறுதியில் முடிவு தெரிந்துவிடும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துள்ளனர். ஒரு காலத்தில் வாரக்கணக்காக டிவி முன்பு உட்கார்ந்து டெஸ்ட் போட்டிகள் பார்த்த நிலை இருந்திருக்கிறது. ஆனால் ஒரு நாள் போட்டிகளின் எழுச்சிக்குப் பிறகு அது குறைந்தது. தற்போது டி-20 போட்டிகள் வந்த பிறகு டெஸ்ட் போட்டி பார்ப்பவர்களின் எண்ணிக்கை மேலும் குறைய ஆரம்பித்துவிட்டது. அதிலும் ஐபிஎல் வந்த பின் இந்தியாவில் ரசிகர்களிடையே டெஸ்ட் போட்டிக்கான மவுசு குறைந்துவிட்டது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளை மறுபடியும் பிரபலப்படுத்தும் வகையில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. பல காலமாக வெறும் கனவாகவே இருந்த இத்திட்டம் தற்போது செயல் வடிவம் பெற இருக்கிறது. அதன்படி சர்வதேச முதல் டெஸ்ட் சம்பியன் ஷிப் போட்டிகள் 2019 ஆண்டில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் மொத்தம் 9 அணிகள் விளையாடும். இரண்டு ஆண்டு காலகட்டத்தில் பல்வேறு தொடர்களாக இந்த சாம்பியன்ஷிப் நடைபெறும். இந்த ஷாம்பியன்ஷிப்பில் ஒவ்வொரு அணியும் உள்நாட்டுத் தொடர்களிலும் வெளிநாட்டுத் தொடர்களிலும் பங்கேற்கும். இரண்டு ஆண்டுகள் நடக்கும் இந்தத் தொடர்களின் முடிவில் முதலிடம் பெறும் இரு அணிகளிடையே லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.
மேலும் டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்களும் செய்யப்பட உள்ளன. இந்தத் தொடர் இரவு பகல் ஆட்டமாகவும் நடத்தப்படலாம். போட்டியை 5 நாட்களில் இருந்து 4 நாட்களாகவும் குறைக்கலாம் எனவும் யோசனை வழங்கப்பட்டுள்ளது.
�,”