ஆன்லைனில் முதல் தடவை பொருட்களை வாங்கிய 54 மில்லியன் இந்தியர்கள், அதற்குப் பிறகு ஆன்லைன் வர்த்தகத்தின் வழியாகப் பொருட்களை வாங்கவே இல்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்தியாவில் இணைய ஊடுருவல் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆன்லைன் வர்த்தக மையங்களின் எண்ணிக்கையும், அவற்றின் மதிப்பும் அதிகரித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தின் வாயிலாகப் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிந்தாலும், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 54 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஒருமுறை மட்டுமே ஆன்லைன் வழியாகப் பொருட்களை வாங்கியுள்ளனர். இவர்களில் ஒருவர்கூட திரும்பவும் ஆன்லைனில் பொருட்களை வாங்கவில்லை என்று *கூகுள், கன்சல்டன்ட்ஸ் பெயின் & கம்பெனி மற்றும் ஒமிதியார்* நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘கடந்த 12 மாதங்களில் 54 மில்லியன் பேர் ஒருமுறை மட்டுமே ஆன்லைன் வழியாகப் பொருட்களை வாங்கியுள்ளனர். பொருட்களை வாங்க இவர்கள் மீண்டும் ஆன்லைன் வலைதளங்களைப் பயன்படுத்தவே இல்லை. இதனால் இந்திய ஆன்லைன் வர்த்தகத்தின் ஒட்டுமொத்த மதிப்பில் 50 பில்லியன் டாலர் அளவுக்குச் சரிந்துள்ளது. இருப்பினும் இன்றளவிலும் ஆன்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 50 மில்லியனாக உள்ளது.
ஒருமுறை மட்டுமே ஆன்லைன் வர்த்தகம் மேற்கொண்டுள்ளவர்களை ஆராயும்போது பெரும்பாலும் அவர்கள் குறைந்த ஊதியம் பெறுபவர்களாகவும், முதன்முறையாக இணையதளம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளவர்களாகவுமே உள்ளனர். இவர்கள் ஆங்கிலத்தைக் காட்டிலும், வட்டார மொழிகளையே நன்கு அறிந்துள்ளனர். மேலும், இந்தியாவில் தற்போதைய நிலையில் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் விகிதமும், ஆன்லைனில் பொருட்களை வாங்குவதைக் கைவிடுவோர்களின் விகிதமும் 1:1 என்ற சமநிலையில் இருப்பதாக வல்லுநர்களும், இ-காமர்ஸ் பங்குதாரர்களும் கூறுகின்றனர்.�,