�
பிப்ரவரி மாதத்தில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை 16 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக நவ்கரி ஆய்வு கூறுகிறது.
ஆன்லைன் வேலைவாய்ப்பு தேடுதல் தளமான *நவ்கரி.காம்* ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் ஆள் சேர்ப்பு நடவடிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, பிப்ரவரி மாதத்தில் நவ்கரி வேலை தேடும் குறியீடு 2,415 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. 2018ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் இதன் அளவு 2,087 புள்ளிகளாக மட்டுமே இருந்தது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறைகளில் ஆன்லைன் வேலைவாய்ப்புகள் 38 சதவிகிதம் உயர்ந்துள்ளன. கட்டுமானம் மற்றும் பொறியியல் துறைகளில் 16 சதவிகிதமும், மனிதவள மேலாண்மைத் துறையில் 20 சதவிகிதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய ஜனவரி மாதத்தில் ஆன்லைன் ஆள் சேர்ப்பில் 15 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. நகர வாரியாகப் பார்த்தால், சென்னையில் 30 சதவிகித வளர்ச்சியும், மும்பையில் 26 சதவிகித வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், ஆட்டோமொபைல் துறையில் 26 சதவிகிதமும், பி.பி.ஒ. துறையில் 13 சதவிகிதமும் கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் துறையில் 14 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சார்ந்த பணியாளர்களுக்கு 38 சதவிகிதம் தேவை இருந்துள்ளது. 4 முதல் 7 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பணியாளர்கள் 25 சதவிகிதம் கூடுதலான அளவில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.�,