�
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் இன்று (செப்டம்பர் 3) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு, சலுகைகள் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் அரசு மருத்துவர்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கைகள் குறித்து நாளை தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று ஏராளமான மருத்துவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
தமிழக அரசு மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதற்கான அரசாணை 10 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த ஆணையை அமல்படுத்தி ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பது, தமிழக அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் போன்றவற்றில் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 20ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் ஜனநாயக அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
�,