தமிழ் சினிமாவில் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். கடந்த ஏழு ஆண்டுகளில் பத்து படங்கள் இவர் நாயகனாக நடித்து வெளியாகியிருக்கிறது. தனுஷ் உடன் இணைந்து நடித்த 3 , விமல் உடன் இணைந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என இரு படங்களும் வணிக ரீதியாகப் பெரும் வெற்றியை பெறவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க படங்களே.
சினிமா பின்னணி இருந்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் கதாநாயகன் அந்தஸ்துக்கு முன்னேற முடியும் என்பதை இரண்டாம் தலைமுறை நடிகரான அஜித் குமார் முறியடித்தார். மூன்றாம் தலைமுறை நடிகரான சிவகார்த்திகேயன் அஜித் வழியில் வெற்றிகரமான கதாநாயகனாக ஏழு ஆண்டுகளில் விஸ்வரூப வளர்ச்சியை எட்டியுள்ளார்.
ஜூன் 1, 2012இல் எழில் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடித்த மனம்கொத்திப்பறவை வெளியானது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தைக் கொடுத்த படமாகும். அதைத் தொடர்ந்து அவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் ஆகிய இரண்டு பட்ஜெட் படங்களும் வெற்றி படங்களாகும்.
அதே போன்று குறைந்த பட்ஜெட்டில் தயாராகி வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வசூல் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனை வியாபார முக்கியத்துவம் மிக்க ஹீரோவாக உயர்த்தியது. இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என இரு தரப்புக்கும் இரு மடங்கு லாபத்தைக் கொடுத்த படமாகும்.
சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த அனைத்துப் படங்களும் தொடர் வெற்றி, வசூல் சாதனை என்பது தொடர்ந்ததால் அவர் நடிக்கும் படங்களின் வியாபார மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.
பட்ஜெட் படங்களிலிருந்து பிரமாண்டமான செலவில் தயாரிக்கப்பட்ட மான் கராத்தே படத்தில் முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடித்துவந்த ஹன்சிகா, சிவகார்த்திகேயன் ஜோடியானார். சிவகார்த்திகேயனை நம்பிச் செலவு செய்யலாம் என்கிற எண்ணத்தைத் தயாரிப்பாளர்களிடம் ஏற்படுத்த அந்தப் படத்தின் வெற்றி உதவியது.
அதன்பின் வந்த காக்கிச்சட்டை வெற்றியடையவில்லை என்றாலும் வசூல் மோசமில்லை. அதற்கடுத்து வெளியான ரஜினிமுருகன் அவருடைய முந்தைய படங்களின் வசூல் கணக்கையெல்லாம் முறியடித்து சிவகார்த்திகேயன் திரை உலக வரலாற்றில் மைல் கல்லானது
அதன்பின் அவர் நாயகனாக நடிக்கும் படங்களின் பட்ஜெட் குறைந்தபட்சம் 30 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்தது.
ரெமோ படம், ரஜினிமுருகன் வசூலை முறியடிக்க அடுத்து வெளியான வேலைக்காரன், ரெமோ வசூலை முறியடித்தது.
கடந்த ஆண்டு வெளியான சீமராஜா பட்ஜெட்டுக்கு உரிய வசூல் ஆகவில்லை என்றாலும் அந்தப் படத்தின் தமிழக வசூல் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய். இது முன்னணி ஹீரோக்கள் நடித்து வெற்றி பெற்றபட வசூலைக் காட்டிலும் அதிகம் .
கடந்த வருட இறுதியில் தயாரிப்பாளராகவும் மாறி, அவர் தயாரித்த கனா திரைப்படம், சமுதாய அவலங்களைச் சுட்டியதோடு, பொது வெளியில் பெரும் விவாதத்தையும் உருவாக்கியது, இளைய சமுதாயத்துக்கு ஊக்கம் தரும் நல்ல கருத்துகளைச் சொன்னதுடன் வசூல் அடிப்படையில் வெற்றி பெற்றது.
திரைத்துறைக்கு வந்து ஏழாண்டுகளில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக, வியாபார ரீதியாக, வசூல் அடிப்படையில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன். சுமார் ஒரு கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மெரினா படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயன் படங்களின் தற்போதைய பட்ஜெட் சுமார் 40 கோடி ரூபாய்.
ரஜினி, விஜய், அஜித் இவர்கள் மூவரும் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீசில் முதல் மூன்று இடங்களில் இருப்பவர்கள். இவர்கள் நடித்த படம் மொக்கையாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க வசூல் நிச்சயம் இருக்கும். இந்த வரிசையில் தவிர்க்க முடியாத நடிகராக சிவகார்த்திகேயன் மாறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.�,