அரபிக் கடலில் ஒரே சமயத்தில் கியார் மற்றும் மகா ஆகிய இரு புயல்கள் நிலைகொண்டுள்ளன. மகா புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் 120 கிமீ வேகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் புயலால் தமிழகத்துக்கு தற்போதைக்கு பாதிப்பு இல்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
புயல் குறித்து இன்று (அக்டோபர் 31) காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கன்னியாகுமரியிலிருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 7 படகுகள், தூத்துக்குடியில் இருந்த சென்ற 5 படகுகளைத் தவிர அனைத்து படகுகளும் கரைக்குத் திரும்பியுள்ளன. இந்த 12 படகில், 4 படகு மீனவர்களுக்குப் புயல் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கரை திரும்பிக் கொண்டுள்ளனர். 8 படகு மீனவர்களுக்கு உள்துறை அமைச்சகம் மூலம் தகவல் தெரிவிக்கவும், அவர்களைப் பத்திரமாக மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. மேலும் மழை பெய்யும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 20 மி.மீக்கு மேலே 21 மாவட்டங்களிலும் 10-20 மி.மீ வரை 6 மாவட்டங்களிலும், 5-10 மி.மீ வரை 3 மாவட்டங்களிலும், 5 மி.மீக்கு கீழே 2 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4399 இடங்கள் பாதிக்கப்படும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு நீர் உறிஞ்சும் இயந்திரங்களை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கியார், மகா புயல்கள் ஓமன் பகுதியில் தான் சென்றுகொண்டிருக்கின்றன. இதனால் தமிழகத்துக்கு தற்போதைக்கு பாதிப்பு இல்லை, புயல் நிலவரத்தைக் கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் தமிழக பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது. தேவையெனில் தேசிய பேரிடர் மீட்புக் குழு வரவழைக்கப்படும்.
மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குழந்தைகளை நீரில் விளையாட விட வேண்டாம். நீரோட்டத்தில் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் மழை பெய்வதை பொறுத்து தேவையான விடுமுறைகளை அறிவிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
�,”