வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் ஒத்திவைப்பு!

Published On:

| By Balaji

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று, இன்று (நவம்பர் 14) சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் சென்னையில் நடைபெற இருந்த நிலையில், மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1.1.2022 தேதியினை மைய நாளாகக்கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து நாளது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளும் வகையில் நவம்பர் 30ஆம் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற இருந்த நிலையில், கனமழை மற்றும் நிவாரணப் பணிகள் காரணமாக மறு தேதி குறிப்பிடப்படாமல் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல் குறித்த சிறப்பு முகாம்கள் நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் மண்டலம் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு உள்பட சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் நடைபெற இருந்தன.

இந்த நிலையில் சென்னையில் ஏற்பட்ட தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாலும், பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் பங்கேற்பதில் சிரமம் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாலும், பொதுமக்களின் நலன் கருதி மேற்படி தேதிகளில் நடைபெற இருந்த முகாம்கள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share