xபெருநஷ்டம்: வோடாபோன் 50,921 கோடி, ஏர்டெல் 23,045 கோடி!

Published On:

| By Balaji

செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த இரண்டாம் காலாண்டில், தொலைபேசி சேவை நிறுவனங்களான ஏர்டெல் ரூ.23,045 கோடி, வோடாபோன்-ஐடியா ரூ.50,921 கோடி என பெருநஷ்டம் அடைந்துள்ளன.

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட ஆண்டு மொத்த வருவாய் (ஏஜிஆர்) கணக்கீட்டில் தொலைத் தொடர்புச் சேவை அல்லாத வர்த்தகங்களின் வருவாய்களையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம் உரிமத்தொகை, அலைக்கற்றைக்(ஸ்பெக்ட்ரம்) கட்டணம் ஆகியவை அரசுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. தற்போது இந்த ஏஜிஆர் உத்தரவை எதிர்த்துத்தான் பார்தி ஏர்டெல், வோடாபோன்-ஐடியா நிறுவனங்கள் போராடி வருகின்றன. இந்நிறுவனங்கள், ஏஜிஆர் உத்தரவு தொடர்பாக அரசிடம் சில சலுகைகளை எதிர்பார்த்து கடந்த மாதம் கோரிக்கை வைத்திருந்தன.

**ஏர்டெல்**

இந்நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் நேற்று(நவம்பர் 14) ரூ.362.65 என்று இருந்தது, 1.59 சதவீதம் சரிவு கண்டுள்ளது. சந்தை முடிந்த பிறகு ஜூலை – செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டு முடிவுகளை இந்நிறுவனம் அறிவித்தது.

ஜூலை-செப்டம்பர் காலாண்டில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 4.7சதவீதம் அதிகரித்து ரூ.21,999 கோடியாக உள்ளது. அரசுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகைகளை பாக்கியில்லாமல் செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, ஏர்டெல் நிறுவனம், இந்த உத்தரவு, நிறுவனத்தின் நிதி நிலைகளில் எதிர்மறைத் தாக்கம் செலுத்தியது என்று தெரிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ.6164 கோடி முதன்மைத் தொகை, ரூ.12,129 கோடி ரூபாய் வட்டி, ரூ.3,760 கோடி அபராதத் தொகை, அபராதத்தின் மீதான வட்டி ரூ.6,307 கோடி ஆகியவையாகும்.

**வோடாபோன் – ஐடியா**

சர்ச்சைக்குரிய ஏஜிஆர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, [இந்தியாவில் அதன் எதிர்காலம் சந்தேகத்திற்குரியதாக இருக்கக்கூடும்](https://minnambalam.com/k/2019/11/13/118/vodafone-headed-for-liquidation) என்று வோடாபோன் தலைமை அதிகாரி செவ்வாய்கிழமை(நவம்பர் 12) தெரிவித்திருந்தார். அரசு, மற்ற நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகைகளை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், செப்டம்பர் காலாண்டில் மொத்தம் ரூ.50,921 கோடி இழப்பை சந்தித்தது வோடாபோன். இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.4,874 கோடி இழப்பாக இருந்தது. இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் இதன் வருவாய் 42 சதவீதம் உயர்ந்து ரூ.11,146.4 கோடியாக உள்ளது.

சமீப காலங்களில் எந்த ஒரு இந்திய நிறுவனமும், காலாண்டில் இத்தகைய பெருநஷ்டத்தை அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share