விருதுநகரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ட்விட்டரில் கார்த்திகை தீபத்துக்கு, பள்ளிக்கு விடுமுறை விடப்படுமா என்று மாவட்ட ஆட்சியரை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் அளவு குறைந்தாலும், தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கனமழை எச்சரிக்கை காரணமான சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
மழையின் காரணமாக இன்று சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்கள் விடுமுறையிலும் விருதுநகர் மாவட்டம் வரவில்லை.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ட்விட்டரில், அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டியை டேக் செய்து, “கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு ஆட்சியர் மேகநாத் ரெட்டி, “நாளை உன் பெற்றோருடன் வந்து என்னை சந்திக்கவும்” என்று பதிலளித்துள்ளார்.
இணைய பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக நேரடியாக மாவட்ட ஆட்சியரிடமே லீவு கேட்கும் அளவுக்கு மாணவர்கள் வந்துவிட்டார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தாலும், பையனுக்குப் பார்த்து எதுனா பண்ணி விடுங்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக நவம்பர் 17ஆம் தேதி இரவு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், “விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் நலன் கருதி (18.11.21) விடுமுறை அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டியை டேக் செய்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஆட்சியர் “விடுமுறை கிடையாது. விருதுநகரில் இரவில்தான் மழை பெய்கிறது. பகலில் வெயில் அடிக்கிறது” என்று பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,