{ஸ்டாலினுக்கு நோட்டீஸ் வந்ததா? திமுக விளக்கம்!

Published On:

| By Balaji

முரசொலி விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளியான தகவலை திமுக மறுத்துள்ளது.

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்ட, இதுதொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார்.

இதற்கான விசாரணை கடந்த நவம்பர் 19ஆம் தேதி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆஜரானார். “முரசொலி நிலம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. மேலும், நிலம் தொடர்பான விவகாரங்களை ஆணையம் விசாரிக்க முடியாது. நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும்” என்று வாதங்களை முன்வைத்திருந்தார். ஆவணங்களைத் தாக்கல் செய்ய போதிய அவகாசம் வேண்டுமென அரசு தரப்பு கோரியதால் விசாரணை ஜனவரிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

முரசொலி விவகாரத்தில் திமுக மீது அவதூறு பரப்பியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் முரசொலி விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டுமென முரசொலி நிர்வாக அறங்காவலரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட நோட்டீஸில், “முரசொலி நிலம் தொடர்பாக வரும் 2020 ஜனவரி 5ஆம் தேதி காலை 11.30 மணிக்கு டெல்லி லோக்நாயக் பவன், 5ஆவது தளத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் விசாரணை நடைபெறவுள்ளது. அப்போது, முரசொலி தொடர்பான ஆவணங்கள், வழக்கு ஆவணங்கள் ஆகியவற்றுடன் நேரில் ஆஜராக வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் போலவே தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், புகார் அளித்த பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி ஆகியோருக்கும் நேரில் ஆஜராக வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதை திமுக முற்றிலும் மறுத்துள்ளது.

இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில், “ஊடகங்களில், எஸ்சி /எஸ்டி ஆணையத்திலிருந்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 7-1-2020 அன்று டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டுமென்று நோட்டீஸ் வந்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே நான் இந்த ஆணையத்தில் நேரில் ஆஜராகி, முரசொலி அறக்கட்டளையின் சார்பாக விரிவான முதல் நிலை ஆட்சேபனை தெரிவித்தேன். அதேநேரத்தில், புகார் கொடுத்தவரான சீனிவாசனும், தமிழக அரசும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வாய்தா வாங்கிச் சென்றது அனைவரும் அறிந்ததே” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மு.க.ஸ்டாலினுக்கு ஏதோ புதியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, ஊடகங்களிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளிவருகின்ற செய்திகள் அனைத்தும், திசை திருப்பும் நோக்கத்தோடு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share