‘விடைபெறுகிறேன்…..’: கொரோனாவால் உயிரிழந்த தாசில்தார்!

Published On:

| By Balaji

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாசில்தார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பொதுவாக நிரந்தர தாசில்தாராக பணியில் இருப்பவர்களுக்கு ஒராண்டுக்கு, ஒரு இடத்தில் பணி வழங்கப்படும். ஓராண்டு பணி காலம் முடிந்ததும் அங்கிருந்து வேறு இடத்துக்கும், வேறு பொறுப்புக்கும் மாற்றப்படுவார்கள்.

விருத்தாசலம் தாசில்தாராக இருந்தவர் கவியரசு. ஓராண்டு பணி காலம் முடிந்தும், தொடர்ந்து அங்கேயே பணியிலிருந்துள்ளார். 18 மாதங்கள் கடந்த பிறகு, அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த அன்புச்செல்வனை சந்தித்து, “சார் ஒரு வருடத்திற்கும் மேலாக பணி செய்து வருகிறேன். என்னை வேறு இடத்திற்கு மாற்றுங்கள்” என்று கேட்டுள்ளார். இதற்கு ஆட்சியரும், நான் போகும் போது மாற்றிவிட்டுப் போகிறேன் என்று பதிலளித்துள்ளார். கடந்த ஜூன் 31ஆம் தேதி ஆட்சியர் அன்புச்செல்வன் ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் கவியரசு வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படவில்லை.

இந்தசூழலில் தாசில்தார் கவியரசு கொரோனாவால் உயிரிழந்துள்ளார். ஒருவேளை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருந்தால் அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கமாட்டார் என்று சக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூலை 7ஆம் தேதி, உடல் நிலை சரியில்லை என்று விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் கவியரசு. அப்போது, திட்டக்குடி தாசில்தார் செந்திலை தொடர்புகொண்டு, “எனக்கு உடம்பு ஒரு மாதிரியாக இருக்கிறது. லீவு போட்டு விட்டு டெஸ்ட் எடுக்க போகிறேன்” என்று தகவல் தெரிவித்துள்ளார். அன்று எடுக்கப்பட்ட டெஸ்டில், நெகட்டிவ் என்று ரிப்போர்ட் வந்துள்ளது.

மீண்டும் 9ஆம் தேதி, உடல் நிலை முடியாமல் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் அங்கிருந்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக 3 மணியளவில் அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவியரசு, தனது முகநூல் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவை கடந்த 10 ஆம் தேதி இட்டுள்ளார். அதில்,

அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய, விருதை வட்ட வாழ் பெருங்குடி மக்களே!

என் மேல் எப்போதும் பாசமழை பொழியும் ஊடக நண்பர்களே!

எப்போதும் அன்பு பாராட்டும் காவல் அலுவலர்களே!

எனது இரண்டாண்டு வருவாய் வட்டாட்சியர் பணியில் உடன் பயணித்த எனது பாசமிக்க கிராம நிர்வாக அலுவலர்களே!

அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களே!

வருவாய் ஆய்வாளர்களே ! கிராம உதவியாளர்களே !

உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை சிரம் தாழ்த்தி சமர்ப்பித்துக் கொள்கின்றேன்.

COVID-19 அறிகுறிகள் காரணமாக தற்போது சிதம்பரம் RMMCH மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியிலிருந்து விலகி விடைபெறுகின்றேன்! சிறப்பு நன்றிகள் எனது ஈப்பு ஓட்டுனர் பாலு, ஒரு சகோதரனைப்போல இதுகாறும் என்னை பாதுகாத்தாய் ! மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன் என்ற நம்பிக்கையுடன்!” என்று பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு தற்காலிகமாக பணியைவிட்டு விடை பெறுகிறேன் என்று கூறியவர் தற்போது நிரந்தரமாக விருத்தாசலம் மக்களை விட்டு விடைபெற்றது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோன்று கோவையில் உள்ள ஆசை மகளுக்கும், மனைவிக்கும் உருக்கமான சில குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளார் கவியரசு. நேற்று காலை வரையில் கவியரசு நலமாக இருப்பதாகச் சிதம்பரம் தாசில்தாரிடம் மருத்துவர்கள் கூறிய நிலையில், நேற்று (ஜூலை 18) இரவு 8.30 மணிக்குத் தவறிவிட்டதாகத் தகவல் சென்றுள்ளது.

கவியரசுக்கு முதலில் டெஸ்ட் எடுத்தபோது நெகட்டிவ் என வந்ததாகவும், நேற்றுதான் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று காலை 9.00 மணிக்கு விழுப்புரம் நகராட்சி மயானத்தில் கவியரசு உடல் தகனம் செய்யப்பட்டது, இதில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்ற வருவாய்த் துறையினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

**யார் இந்த கவியரசு**

விழுப்புரத்தைச் சேர்ந்தவர். இவரது, தந்தை இருசன், அரசு கல்லூரியில் பணி செய்தவர். தாயார் சாரதா( 81). மூத்த சகோதரர் அமெரிக்காவில் உள்ளார். சகோதரி பூங்குழலி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதியாக இருக்கிறார்.

கவியரசு, மனைவி உமையாள். ஆரத்தியா என்ற ஒரே மகள் உள்ளார். இரண்டாம் வகுப்பு படிக்கிறார். கொரோனாவுக்கு முன்பு மாமனார் வீட்டில் துக்க சம்பவம் என்பதால் கோவைக்கு சென்று மனைவியையும் பிள்ளையையும் விட்டுவிட்டு வந்து, விருத்தாசலம் அரசு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

விருத்தாசலத்தில், தாசில்தார் பொறுப்பேற்றதிலிருந்து மக்களை தேடி கிராமங்களுக்குச் சென்று மக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து கொடுத்து வந்துள்ளார். காசு பணத்துக்கு ஆசைப்பட்டு லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி என்று கூறப்படுகிறது. அனைத்து தரப்பு மக்கள் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

சட்டத்துக்குட்பட்டுச் செய்யமுடியாத உதவிகளைத் தனது சொந்த பணத்திலிருந்து பலருக்கு உதவி செய்து வந்துள்ளார். இளம்வயதில் வருவாய்த் துறையில் பணியில் சேர்ந்ததால், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரியாகவும் பதவி உயர்வுக்குத் தகுதியானவர் என்கிறார் உடன் பணியாற்றிய ஊழியர் ஒருவர்.

மற்ற வட்டாட்சியர்களைப் போன்று, வருவாய் கணக்குகள், பட்டா சிட்டா மாற்றித் தருவது, விசாரணை செய்வது போன்ற வழக்கமான அன்றாடப் பணிகளோடு முடித்துக்கொள்ளாமல், தான் பணியாற்றும் ஊர்களில் வரலாற்றுச் சிற்பங்களை கள ஆய்வு செய்து தொகுத்து வந்துள்ளார் கவியரசு.

“ஒரு வரலாற்று ஆர்வலராகவும், கல்வெட்டு ஆய்வாளராகவும் விருத்தாசலம் பகுதியில் உள்ள பல கல்வெட்டுகளை ஆய்வுசெய்து புத்தகம் எழுதுவதற்கு பல பக்கங்களை கவியரசு மலைபோல் குவித்து வைத்துள்ளார்” என்று அவரது உதவியாளர் கூறியுள்ளார்.

“செல்லக்கூடிய கோயில்களில் கொடுக்கும் தல புராணத்தை வாங்கி படித்து, எந்த நூற்றாண்டில் எந்த மன்னரால் கட்டப்பட்டது, கட்டிடத்தின் தன்மை என்ன என்றெல்லாம் ஆய்வு செய்வார். எழுத்தாளராகவும், சிறந்த புகைப்பட கலைஞராகவும், பேச்சாளராகவும் பணியில் நேர்மையாகவும் கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும் இருந்த கவியரசு மரணம், பெரிய இழப்பு என்கிறார்கள்” வருவாய்த் துறை அதிகாரிகள்.

**-வணங்காமுடி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share