`
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த காவலர் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 5) உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில், கலங்காபேரி பகுதியைச் சேர்ந்த அய்யனார்(42) என்பவர் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு உடல் சோர்வு போன்ற வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்துள்ளது.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அய்யனார், பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு ஜூலை 2ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி தலைமைக் காவலர் அய்யனார் உயிரிழந்தார். இது விருதுநகர் காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவலர் அய்யனாருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் களப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், காவல்துறையினர், செவிலியர்கள் ஆகியோர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது. முன்னதாக சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**�,