‘ஆனாலும் அந்த மனசு இருக்கே’: சாண்டா கோலியைக் கொண்டாடும் ரசிகர்கள்!

Published On:

| By Balaji

சமீபத்தில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பிரபலங்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்திருந்தார்.

கிரிக்கெட் உலகையும் தாண்டி மக்கள் மனத்தில் பிரபலமடைந்ததால்தான், முன்னணி நடிகர்களைக் கடந்து முதலிடத்துக்கு வர அவரால் முடிந்தது. அதிரடியாக விளையாடியும் தனது நடத்தையாலும் எதிரணிக்குப் பதிலடி கொடுக்கும் அவருக்குப் பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. கிரிக்கெட் மட்டுமின்றி தொலைக்காட்சி விளம்பரங்களிலும் தோன்றி குழந்தைகளையும் அவர் தனக்கு ரசிகர்களாகப் பெற்றுள்ளார். இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்று விராட் கோலியின் நல்ல மனத்தையும் பாராட்ட வைத்துள்ளது.

அந்த வீடியோ, ‘கிறிஸ்துமஸ் விழாவுக்கு சில தினங்கள் முன்பு குழந்தைகள் காப்பகம் ஒன்றுக்கு நாங்கள் சென்றோம்’ என்ற வாசகத்துடன் ஆரம்பமாகிறது. கொல்கத்தாவில் இருக்கும் அந்தக் காப்பகத்தில் உள்ள குழந்தைகளிடம் உங்கள் சூப்பர் ஹீரோ யார் என்று கேட்கப்படுகிறது. அதற்கு அவர்கள் சூப்பர் மேன், அயர்ன் மேன் என்று பதில் கூறுகிறார்கள். தொடர்ந்து கிறிஸ்துமஸ் குறித்து கேட்கும்போது, ‘கிறிஸ்துமஸ் தினத்தில் இரவு சாண்டா வருவார். அவர் நிறைய பரிசுகளையும், இனிப்புகளையும் கொண்டு வந்து தருவார்’ என்கின்றனர். பிறகு பிடித்த விளையாட்டு வீரர் குறித்து கேட்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரைக் கூறுகின்றனர், சிலர் விராட் என்றும் சொல்கின்றனர். ஒரு சிறுவன் தாடி வைத்திருப்பவர் என சொல்லி விராட்டைக் குறிக்கிறார். இவர்கள் பேசும் வீடியோவை விராட் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு என்ன கிஃப்ட் வேண்டும் என்று அவர்களிடம் கேட்க ‘சாண்டா க்ளாஸ், ஹெலிகாப்டர் கொண்டு வர வேண்டும். பொம்மை, ஃபுட்பால், பேட்மின்டன் மட்டை வேண்டும்’ எனத் தங்கள் விருப்பங்களைக் கூறுகின்றனர். விழா நடந்து கொண்டிருக்கும்போது திடீரென சாண்டா க்ளாஸ் தோன்றி அவர்கள் விரும்பிய பரிசுகளைக் கொடுக்கின்றார். ‘பரிசுகள் கொடுக்க ஸ்பைடர் மேனும் சூப்பர் மேனும் வரவில்லை. சாண்டா க்ளாஸ், விராட் கோலியைக் கொண்டு வந்தால் மகிழ்ச்சியா?’ என்ற காப்பக உரிமையாளர் கேட்கிறார், குழந்தைகளும் சரி என்று கத்துகின்றனர்.

தனது சாண்டா க்ளாஸ் வேஷத்தைக் கலைத்து, கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லுகிறார் விராட். குழந்தைகள் அனைவரும் ஓடி வந்து அவரைக் கட்டி அணைத்துக் கொள்கின்றனர். இப்படியாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

அந்த வீடியோவையும், விராட் கோலியையும் ரசிகர்கள் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share