விநாயகர் சதுர்த்தி: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Published On:

| By Balaji

கோயில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து சமய அறநிலையத் துறையினர் நீர் நிலைகளில் கரைக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. பொது வெளியில் வழக்கமான கொண்டாட்டங்கள் இல்லாமல் விழா களையிழந்து காணப்பட்டாலும் வீடுகளில், மக்கள் சிலைகளை வைத்து வழிபட்டுக் கொண்டாடுகின்றனர்.

வழக்கமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது, அதன்பின் மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைத்துக் கொண்டாடப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தமிழக அரசு தடை விதித்தது. வீட்டிலேயே கொண்டாடி கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்து முன்னணி, சிவசேனா அமைப்புகளால் வழக்குத் தொடரப்பட்டன.

அதுபோன்று, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி என்பவர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் வழக்கம் போல் வீதிகளில் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதியளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் உறுதி செய்துள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதைத் தடுப்பது அரசின் நோக்கமல்ல; கொரோனா பரவலைத் தடுக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ”பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதற்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் சிலைகளை வைத்துத் தனி நபர்கள் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கத் தடையில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பொது இடங்களில் சிலைகள் வைக்கவும் ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் விதிக்கப்பட்ட அரசின் தடை செல்லும். வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்படுகிறது. சென்னையில், மெரினா தவிரப் பிற இடங்களில் தனி நபர் இடைவெளியுடன் சிலைகளை கரைக்கலாம் என்று தெரிவித்து நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில், பொதுமக்களால் கோயில்களில் வைக்கப்படும் சிலைகளை அறநிலையத் துறையே சேகரித்துக் கரைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன் இன்று (ஆகஸ்ட் 22) தமிழக அரசுத் தரப்பில் அவரச முறையீடு செய்யப்பட்டது.

இதனை ஏற்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், வீட்டில் வைத்து வழிபட்டு கோயில்களில் வந்து வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து அறநிலையத் துறையினரே நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைக்கலாம் என்று அனுமதி வழங்கினர்.

அதேசமயம், நேற்று பிறப்பித்த உத்தரவில், தனி நபர்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்த பின்னர் சிலைகளை அவர்கள் வீட்டின் முன் வைக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. உத்தரவின் இந்தப் பகுதியில், வழிபாட்டிற்குப் பின்னர் வீட்டின் முன் வைக்கலாம்” என்ற பகுதியை மட்டும் நீக்குவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

**-கவிபிரியா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share