விநாயகர் சதுர்த்தி நிபந்தனைகளில் தளர்வு அளிக்கப்படுமா?

Published On:

| By Balaji

மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால் விநாயகர் சதுர்த்தி நிபந்தனைகளில் ஏதேனும் தளர்வுகள் அளிக்க வாய்ப்பு உள்ளதா எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது. வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்த தடை விதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் வீட்டிலேயே சிலையை வைத்து வழிபட வேண்டும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில் தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், கொரோனா பரவும் நேரத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்வுக்கு எப்படி அனுமதி அளிப்பது என்று கேள்வி எழுப்பி தடையை நீக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்தது.

அதுபோன்று பத்திரிகையாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், தடையை மீறிச் சிலை வைத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல. கணபதி என்பவர் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி கேட்டுத் தொடர்ந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 20) விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு, “விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால் இவ்விவகாரத்தில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதா” என்று கேள்வி எழுப்பியது.

மேலும், சிலைகளை செய்யும் கைவினைக் கலைஞர்களின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும். முழுமையான தடை காரணமாகக் கைவினை கலைஞர்கள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் தெரிவித்தனர்.

மேலும், தற்போதைய சூழல் குறித்து தாங்கள் நன்கு அறிந்து உள்ளதாகவும், பெரிய அளவிலான ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயத்தில் சிலையை வைத்து வழிபட்ட பின் ஐந்து அல்லது ஆறு நபர்களுக்கு மிகாமல் பேரிடர் விதிகளைப் பின்பற்றி பொதுமக்கள் சிலையைப் பெரிய கோயில்கள் அருகில் கொண்டு வைத்து விடுவது அல்லது தாங்களே சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் விட்டுவிடுவது போன்றவற்றை அனுமதிக்கச் சாத்தியக்கூறுகள் உள்ளதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து அரசின் விளக்கத்தைப் பெற்று பதில் தெரிவிப்பதாகத் தலைமை வழக்கறிஞர் தெரிவித்த நிலையில் வழக்கு விசாரணையை நீதிபதிகள் நாளை (ஆகஸ்ட் 21) ஒத்தி வைத்தனர்

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share