விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, விநாயகர் சிலைகளை விற்க அனுமதிக்க கோரி சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு, மண்பாண்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த மண்பாண்ட பொருட்களைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் உற்பத்தி செய்த பல்வேறு வடிவிலான மண்பாண்டங்கள், சிலைகள் உள்ளிட்டவை தேங்கிக் கிடக்கின்றன.
இதற்கிடையே நாடு முழுவதும் அடுத்த மாதம் (செப்டம்பா்) 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் விநாயகர் சதுர்த்தி விழாவை சமூக இடைவெளியுடன் கொண்டாட அனுமதி வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் வங்கியில் வாங்கிய தொழில் கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் திடீரென பானை, விநாயகர் சிலைகளை வைத்துக்கொண்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸார் விரைந்து வந்து மண்பாண்ட தொழிலாளர்களிடம், சப்-கலெக்டரிடம் மனு கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தினர்.
அதை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, சப்-கலெக்டர் மதுபாலனிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
**-ராஜ்**
.�,