i
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுகொத்தாம்பாடி பகுதியில் பாலம் கட்டித்தரக்கோரி ஆற்றில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுகொத்தாம்பாடி கிராமத்தில் 4,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள சிற்றாற்றைக் கடந்து தான் பொது மக்கள் செல்ல வேண்டும். ஆனால் அந்த ஆற்றின் குறுக்கே பாலம் இல்லை.
இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பனை ஏரி நிரம்பி, உபரிநீர் வெளியேறியது. இதைத்தொடர்ந்து புதுகொத்தாம்பாடி வழியாக வரும் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரக்கோரி கிராம மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “புதுகொத்தாம்பாடியில் ஓடும் ஆற்றில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் ஆற்றை கடந்து செல்வதற்கு அச்சமாக இருக்கிறது. எனவே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு பாலம் அமைக்க கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எங்கள் போராட்டம் தொடரும்” என்று கூறினார்.
**-ராஜ்**
.�,