மணல் லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் இயங்கி வரும் மணல் குவாரிக்கு மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் கல்லணை அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையை அடைவதற்கு திருச்சியில் இருந்து திருவளர்சோலை, பனையபுரம் வழியாக கல்லணை சாலையில் சென்று வருகின்றன.
அவ்வாறு செல்லும்போது திருச்சி – கல்லணை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. எனவே மணல் லாரிகள் கல்லணை சாலை வழியாக செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கூறி பனையபுரம் கிராம மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்களது கோரிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். இதனையடுத்து சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
**-ராஜ்**
.