சிங்கப் பெண்கள் போர்: இழுத்து மூடப்பட்ட டாஸ்மாக்

public

ஒன்றரை மாதம் கழித்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்தியது ஓர் அடையாளப் போராட்டமாகவே அமைந்தது. ஸ்டாலின், வைகோ, கே.எஸ். அழகிரி, முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்று சில நிமிடங்கள் கோஷமிட்டுவிட்டு வீட்டுக்குள் போய்விட்டனர்.

ஆனால், தஞ்சைமாவட்டம் சாலியமங்கலம் அருகே கிராமப் பெண்கள் சிங்கப் பெண்களாய் மாறி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டுப் போராடி ஒரு மணி நேரத்தில் மதுக்கடையை மூடச் செய்துவிட்டனர்.

நேற்று (மே 7) தமிழகம் முழுதுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது போலவே தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் அருமலைக்கோட்டை கிராமப் பஞ்சாயத்தில் வயல்வெளிக்கு நடுவே இருந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மரக் கட்டைகளால் ஆன தடுப்புகள் கட்டி, சாமியானா பந்தல் போட்டு ‘மதுபிரியர்களுக்கு’ மகத்தான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தது அரசு.

காலைமுதலே கூட்டம் வரிசையில் காத்திருக்க, 10 மணிக்கு கடை திறந்து கொஞ்ச நேரம் வியாபாரம் நடந்தது. சில நிமிடங்களில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி செண்பகபுரம் கிராம மகளிர் சுய உதவிக் குழுப் பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையோடு டாஸ்மாக் கடையை நோக்கி படையெடுத்தனர்.

வரிசையில் நின்றிருந்த ஆண்கள் எல்லாம், ‘என்ன இவ்வளவு பொம்பளைங்க வர்றாங்க?’ என்று திகைத்துக் கொண்டிருக்க, அந்த சிங்கப் பெண்கள் படை கட்டைத் தடுப்புகளை எல்லாம் மீறி கடை அருகில் சென்று, ‘நீ கடையை மூடிட்டு வெளியே வர்றியா? இல்ல நாங்க கடைக்குள்ள புகுந்து எல்லா பாட்டிலையும் உடைக்கட்டுமா?” என்று கேட்க சேல்ஸ்மேன் பயந்து வெளியே வந்துவிட்டார்.

பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் திகைத்துப் போய், ‘என்னம்மா இங்க கூட்டம்?’ என்று கேட்க, ‘கடைய மூடணும்’ என்று ஒட்டுமொத்த பெண்களும் காரசாரமாக பதிலளித்தனர். அந்த கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) அர்ச்சனாவும் டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்,.

அவர் உடனடியாக வருவாய் துறையினருக்கும் காவல்துறை டிஎஸ்பிக்கும் தகவல் கொடுத்தார். அவர்களும் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டனர்.

‘என்னாங்க இது…ஏற்கனவே வேலைக்குப் போகாம வீட்ல ஒண்ணும் இல்ல. இதுல சாராயக் கடையை திறந்து குடும்பத்தை ஒட்டுமொத்தமா துடைக்க முடிவு பண்ணிட்டிங்களா? கடையை மூடுங்க. அதுவரைக்கும் போக மாட்டோம்’ என்று பெண்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்பிப் போராடினார்கள். அவர்களைத் தாண்டி எந்த ‘ஆம்பளையும்’ மதுவாங்க கடைக்குப் போக முடியவில்லை. பெண்களின் போராட்டம் தொடர்ந்ததால், கடையின் ஷட்டர் இழுத்து மூடப்பட்டது.

’கடைதான் மூடியாச்சே கிளம்புங்க’ என்று பெண்களை போலீசார் விரட்ட, ‘எதுக்கு… நாங்க அந்தப் பக்கம் போனவுடனே இந்தப் பக்கம் திறக்குறதுக்கா? கடையில இருக்கிற ஒட்டுமொத்த சரக்கையும் எடுத்துட்டுப் போகச் சொல்லுங்க. அதுவரைக்கும், ஓயமாட்டோம்’ என்று பெண்கள் அந்த சாமியானாவிலேயே தங்கிவிட்டனர்.

அதன்பின், ‘கடைவேற வயல் வெளியில இருக்கு. இந்தப் பெண்களுக்கு இருக்கும் கோபத்தப் பார்த்தா இரவு நேரத்துல கடையை தீ வச்சாலும் வச்சிடுவாங்க. அதனால கடையில் இருக்கும் சரக்கையெல்லாம் மாற்றிவிடுவதே பெட்டர்’ என்று போலீசார் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பிறகு டாஸ்மாக் தாசில்தாரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் வண்டியைக் கொண்டு வந்து அந்த கடையில் இருக்கும் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றனர். இன்றும் அந்த அருமலைக்கோட்டை டாஸ்மாக் திறக்கப்படவில்லை என்கிறார்கள் பொதுமக்கள்.

‘செண்பகபுரம் பஞ்சாயத்தும் அருமலைக்கோட்டை பஞ்சாயத்தும் தனித்தனிதான். ஆனா இந்த டாஸ்மாக் கடை ரெண்டு பஞ்சாயத்தையும் கெடுக்குது. எங்க வீட்டு ஆம்பளைங்க ஒன்றரை மாசமா வேலையில்லாம இருக்காங்க. இந்த நேரத்துல கடையைத் திறந்தா குடும்பத்துல என்ன வேணாலும் நடக்கலாம். அதனாலதான் நாங்களே திரண்டு வந்து நின்னுட்டோம்’ என்கிறார்கள் அவர்களுடன் சில ஆண்களும் போராட வந்தது ஆறுதலான மாறுதல்.

போராட்டப் பெண்களின் உறுதியால் இனி இந்த கிராமத்தில் மதுக் கடை திறந்தால் பாதுகாப்பாக இருக்காது என மாவட்ட நிர்வாகம் வரை தகவல் கொடுத்துவிட்டார் விஏஒ என்கிறார்கள் கிராம மக்கள்.

கட்சிகளை நம்பாமல் பெண்கள் தங்களை நம்பினாலே இதுபோன்ற மாற்றங்கள் நடக்கும் என்று நிரூபித்திருக்கிறது அருமலைக்கோட்டை- செண்பகபுரம்

**-ஆரா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *