விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதேபோல, திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திண்ணைப் பிரச்சாரம், மக்கள் சந்திப்பு என திமுக தலைவர் ஸ்டாலினும் வாக்கு சேகரித்து வருகிறார். மாலை நேரங்களில் வேன் மூலமாகவும் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.
இந்த நிலையில் முதல்வரின் பிரச்சாரம் எப்படி செல்கிறது என்பதை அறிய விக்கிரவாண்டிக்கு விரைந்தோம்…
முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து முண்டியம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் நேற்று (அக்டோபர் 13) பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்காக பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என அனைவரும் டாடா ஏசி, லாரி போன்ற வாகனங்களில் பாதுகாப்பற்ற முறையில் அழைத்துவரப்பட்டனர். முதல்வர் வருகைக்குக் காத்திருந்த மக்களின் மனநிலையை அறிந்துகொள்ள அவர்களிடம் பேசினோம்.
விலை வாசி உயர்வு குறித்து நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிந்தாமணி, ஜெயலட்சுமி உட்பட சிலர்,“ஐந்து வருடத்திற்கு முன்பு வரை நூறு ரூபாய் எடுத்துச் சென்று ஒரு பை நிறைய காய்கறிகளை வாங்கிவருவோம். ஆனால், இப்போது இரண்டு கிலோ வெங்காயமே நூறு ரூபாய் விற்கிறது” என்றவர்கள், பிரச்சாரம் பற்றி பேசினர்.
“முதல்வர் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு வந்தால் ரூ.200 கொடுப்பதாகக் கூறி பெயரை எழுதிக்கொண்டார்கள். டாடா ஏசியில் ஏறச் சொன்னார்கள். கிளம்பி வந்துவிட்டோம். இன்னும் பணம் கொடுக்கவில்லை. வீட்டுல இருக்குற ஆம்பளைங்க ஓட்டுக்கு பணம் வாங்கி மதுக்கடைக்கு சென்றுவிடுகிறார்கள். தாங்கள் சொல்லும் நபருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறுவார்கள். நாங்கள் ஓட்டுபோடமல் இருந்தாலும் விடமாட்டார்கள்” என்று நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.
வசந்தம் என்பவர், “கடந்த 2016 தேர்தலில் ஏழுமலை (அதிமுக வேட்பாளர்) ரூ.200 கொடுத்தார். இப்போது எவ்வளவு கொடுப்பார்கள் என்று தெரியவில்லை” என்றார்.
முண்டியம்பாக்கத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ராதாபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் முதல்வர். முதல்வரைப் பார்க்க பெண்மணி ஒருவர் தனது வீட்டு வாசலில் காத்திருந்தார். அவரிடம் பேசியபோது, “கடந்த தேர்தலில் ஓட்டுக்கு ரூ.200 ரூபாய் கொடுத்தார்கள். என்னோட மகளுக்கு கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். இந்த தேர்தலில் எப்படி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. மேலே உள்ளவர்கள் பணம் கொடுக்கச் சொல்லி அனுப்புகிறார்கள். கீழ் மட்டத்தில் அதனை கொடுக்காமல் சுருட்டிக்கொள்கிறார்கள். நாங்கள் எல்லோரிடமும் பணம் வாங்கமாட்டோம். ஓட்டு போடுபவர்களிடம் மட்டும்தான் வாங்குவோம்” என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே பிரச்சாரத்திற்கு கூட்டம் கூடியது குறித்து அங்கிருந்த அதிமுக பொறுப்பாளர்கள் காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். “தொரவில் கிராமத்தில் மட்டும் 1500 பேர் வந்துள்ளார்கள். கையில் ரூ. 200 பணம் கொடுத்ததும் லாரியில் வந்துவிட்டார்கள்” என்று கூறிய அதிமுக நிர்வாகி ஒருவர், “வெள்ளிக்கிழமை திமுக வேட்பாளர் வருகிறார் என்று அழைத்துவந்த மக்களுக்கு பணம் கொடுக்கவில்லை போல. பணம் கொடுத்தால்தான் நகருவோம்னு மக்கள் மறியல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதன் பிறகு திமுக நிர்வாகிகள் அடித்து பிடித்துக்கொண்டு ஓடிவந்து பணம் கொடுத்துச் சரிசெய்தார்கள்” என்று சொல்ல அனைவரும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர்.
ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேரிடம் ஓட்டு உள்ளது எனக் கணக்கெடுத்து பணம் கொடுக்கத் தயாராகி வருகிறது அதிமுக. தீபாவளியும் வரவுள்ளதால் பட்டாசு பாக்ஸ் கொடுக்கவும் அதிமுக பொறுப்பாளர்கள் லிஸ்ட் எடுத்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்திற்கு வந்தாலும் பணம், ஓட்டுப் போடுவதற்கும் பணம் என்ற நிலையை உருவாகிவிட்டார்கள் நம நாட்டு அரசியல்வாதிகள்.
**மின்னம்பலம் டீம்**
�,”