விக்கிரவாண்டியில் ஸ்டாலின் அனுப்பிய ஆய்வு டீம்!

Published On:

| By Balaji

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தோல்வியை அடுத்து விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் இருந்து பல்வேறு புகார்கள் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றுகொண்டிருக்கின்றன.

விக்கிரவாண்டி தொகுதியை உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடியின் எதிர்ப்பாளர்கள், ‘இந்த தேர்தல் தோல்விக்கு பொன்முடிதான் காரணம்’ என்றும், பொன்முடி ஆதரவாளர்களோ, ‘தேர்தலில் கடுமையாகத்தான் உழைத்தோம். ஆனால் மக்கள் தீர்ப்புக்கு ஒரு தனி நபரை குற்றம் சாட்டுவது முறையா?’ என்றும் கூறி வருகிறார்கள்.

தீபாவளிக்கு முன்பே பொன்முடி, விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தியுடன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து இடைத்தேர்தல் தொடர்பாக, ஒரு ஃபைலை அளித்தார் என்பதை மின்னம்பலத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இதற்கிடையில் விக்கிரவாண்டியில் தேர்தல் பணியாற்றிய திமுகவின் சீனியர் நிர்வாகிகளும் ஸ்டாலினுக்கு சில தகவல்களை அளித்திருந்தார்கள். அதில் பொன்முடியின் செயல்பாடுகள் பற்றி அதிருப்தி தெரிவித்திருந்தாக தெரிகிறது.

இதற்கிடையில் தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “எதையும் எவரிடமிருந்தும் மறைக்காமல், உண்மை நிலவரங்களை மறக்காமல், இயக்கத்தின் நலன்- வளர்ச்சி ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு, திறந்த மனதுடன் கலந்தாலோசிக்கக் கூடுவதுதான் கழகப் பொதுக்குழு.வெற்றி பெற்ற போது நாம் வகுத்த வியூகங்கள் என்ன? களத்தில் வெளிப்படுத்திய உழைப்பு எத்தகையது? இவை அனைத்தும் இரு தொகுதிகளுக்கான களத்தில் என்னவாயிற்று? ஆளுந்தரப்பின் அதிகார துஷ்பிரயோகப் பாய்ச்சலைக் கணிக்க முடியாத சுணக்கம் நம்மிடம் இருந்ததா? ஒருங்கிணைப்பு குறைந்ததா? தோல்விக்கான உண்மையான, முழுமையான காரணங்கள் என்னென்ன? என்பவை அனைத்தும், உடன்பிறப்புகளின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் வகையில், பொதுக்குழு வில் நேர்மையாக விவாதிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

அதன்படியே, விக்கிரவாண்டி தேர்தலில் திமுக சார்பில் செய்யப்பட்டவை என்ன செய்யப்படாதவை என்ன என்பது பற்றிய முழு கள அறிக்கை பொதுக்குழுவுக்கு முன் வேண்டும் என்று சொல்லி, திமுகவின் சட்டத்துறை ஆலோசகரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ தலைமையில் ஒரு டீமை அனுப்பி வைத்திருக்கிறார். அவர்கள் விக்கிரவாண்டி தொகுதி உட்பட்ட விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரிடமும் விசாரித்து வருகிறார்கள். இந்தத் தகவல் திமுக சீனியர்கள் பலருக்கே தெரியாது.

தன் மாவட்டத்தில் தலைமை அனுப்பிய டீம் விசாரித்து வருவதை அறிந்த பொன்முடி, “இப்ப எல்லாரும் சேர்ந்து என் தலைய உருட்டுறாங்க. வைகோ கட்சியை விட்டுப் போனபோதே ஒட்டுமொத்த விழுப்புரம் திமுகவும் அவர் பின்னாடி போயிருக்கும். அப்போ விழுப்புரம் திமுகவை காப்பாத்தினதே நான் தான். ஆனா நான் மட்டுமே தோல்விக்குக் காரணம்னு பேசறாங்க. இடைத்தேர்தல்ல எதிர்க்கட்சி என்னிக்கு ஜெயிச்சிருக்கு>” என்று தன் ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார்.

“திமுக தலைவர் இதேபோல பல ஆய்வுகள் செய்யச் சொல்கிறார். அவரே நிர்வாகிகளிடம் பேசி கள ஆய்வுகளும் செய்தார். ஆனால் ரிசல்ட் என்று எதுவுமில்லையே? பின் எதற்கு இத்தனை ஆய்வுகள்” என்று கேட்கிறார்கள் திமுக தொண்டர்கள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share