விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் நாளை (அக்டோபர் 21) சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நேற்றோடு பிரச்சாரம் ஓய்ந்தது.
விக்கிரவாண்டியில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோத, நாங்குநேரியில் அதிமுகவோடு திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் மோதுகிறது. இரண்டு தொகுதிகளிலும் இரண்டு கூட்டணி கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள கடைசிகட்ட ஆயத்தத்தில் இருக்கின்றன.
இரண்டு தொகுதிகளிலும் உள்ள வெளியூர் ஆட்கள் நேற்று மாலை 6 மணிக்கு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அனைவரும் வெளியேறி விட்டனர். கடைசிகட்ட தேர்தல் செயற்பாடுகளுக்காக திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பு வழக்கறிஞர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாங்குநேரியைப் பொறுத்தவரை திமுக சார்பில் சுமார் 50 வழக்கறிஞர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைமைக் கழகம் சார்பாக ஐந்து வழக்கறிஞர்கள் சிறப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் எவை எனக் கண்டறிந்து அந்தச் சாவடிகளில் முறைகேடுகள் ஏதும் நடைபெறுகின்றன என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு இந்த வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேபோல விக்ரவாண்டி தொகுதியிலும் ஒரு வழக்கறிஞர் டீமை ரெடி செய்து வைத்துள்ளது திமுக. இங்கே பாமக வழக்கறிஞர் அணியும் அதிமுக வழக்கறிஞர் அணியும் தயாராக இருக்கின்றன.
ஏற்கெனவே விக்ரவாண்டி தொகுதி தேர்தலை மையமாக வைத்து திமுகவுக்கும் பாமகவுக்கும் தொடர் அறிக்கை மோதல்களும் பிரச்சார மோதல்களும் நடைபெற்றுவரும் நிலையில் கடைசிகட்ட கள மோதல்களும் ஏற்பட்டுவிடக்கூடும் என்ற பதற்றம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இதைத் தடுப்பதற்காக போலீசாரும் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரு தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான போலீசார் விடுதிகள் மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.�,