திமுகவினரை நோக்கி… சி.வி. சண்முகத்தின் விக்கிரவாண்டி வியூகம்!

Published On:

| By Balaji

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் திறந்தநிலை அரங்கத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (செப்டம்பர் 30) விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அரங்கத்துக்குள் மூன்றாயிரம் முதல் நான்காயிரம் பேர் வரை திரண்ட நிலையில், வெளியே சுமார் இரண்டாயிரம் பேர் திரண்டிருந்தனர். 15 அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் தடபுடலாக அனைவருக்கும் பிரியாணி விருந்தும் பரிமாறப்பட்டது. வந்த கூட்டத்தில் பரவலாக பாமகவினரும் நிறைந்திருந்தனர்.

கூட்டத்தில் சிவி. சண்முகம் பேசும்போது, “விழுப்புரத்தில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரமுள்ள விக்கிரவாண்டியில் அம்மா அரசு குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் இரண்டையும் கொண்டுவந்தது. இதைப் பாராட்ட வேண்டாம். ஆனால் ஏன் திறந்தார்கள் என்று தேர்தல் ஆணையத்திடம் போய் மனு கொடுத்திருக்கிறது திமுக. நீதான் நல்லது செய்யவில்லை. அடுத்தவர்கள் நல்லது செய்தால் அதைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை கம்முன்னு இரு.

விழுப்புரம் மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தேன் என்கிறார் பொன்முடி. மருத்துவக் கல்லூரி அருகே அவர் நிலம்தான் இருக்கிறது. பிரசவ வார்டுக்கு லிப்ட் இல்லை. ஆனால் அந்த மருத்துவக் கல்லூரியில் அனைத்து வசதிகளையும் கொண்டுவந்தது அம்மா அரசுதான்” என்றார். பேசிய பலரும் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள்.

வெளியே இப்படி திமுக தலைவர் ஸ்டாலினைக் கடுமையாகத் தாக்கிப் பேசினாலும் உள்ளுக்குள் சி.வி. சண்முகம் வகுத்திருக்கும் வியூகம் வித்தியாசமானது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

அது என்னவென விசாரித்தோம்.

“அமைச்சர் சி.வி. சண்முகம் அதிமுக நிர்வாகிகளுக்கு முக்கியமான ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதாவது, ‘திமுக நிர்வாகிகள் பலர் தலை காய்ஞ்சு போயிருக்காங்க. திமுகவில் தொடர்ந்து செலவு வைத்துக் கொண்டிருப்பதால் அவர்கள் விரக்தியில இருக்காங்க. பத்தாக்குறைக்கு பொன்முடியை பிடிக்காதவங்க விக்கிரவாண்டி திமுகவுக்குள்ளயே பரவலா இருக்காங்க. அவங்களை நோக்கி நாம திரும்பணும். அவங்களுக்கு தேவையானதை செஞ்சு கொடுத்து அவங்களை நம்ம பக்கம் கொண்டுவர்றமோ இல்லையோ, திமுகவுக்கு தேர்தல் வேலை பாக்காம அவங்களை ஆஃப் பண்ணனும். லோக்கல் திமுக காரங்க மட்டுமில்ல, வெளியூர்லேர்ந்து தேர்தல் வேலைக்கு வர்ற திமுக நிர்வாகிகளையும் அப்ரோச் பண்ணுங்க” என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அதாவது, மேடையில திமுக தலைவர்களைத் திட்டணும். கீழே திமுக நிர்வாகிகளை அரவணைக்கணும். இதுதான் சி.வி. சண்முகத்தின் ப்ளான். விக்கிரவாண்டியில் வெற்றி உறுதி. வித்தியாசத்தைதான் அதிகப்படுத்தணும்னுதான் ஓடிக்கிட்டே இருக்காரு அமைச்சர் ” என்கிறார்கள் அதிமுகவினர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share