விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 18ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டு தொகுதிகளிலும் நாளையுடன் பிரச்சாரம் ஓயவுள்ள சூழலில், அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் 139 இடங்களில் 275 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதில் 70 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் இன்று (அக்டோபர் 18) திமுக சட்டப் பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் தொடர்பாக மனு ஒன்று அளிக்கப்பட்டது.
**அதிமுக-சமூக விரோதிகள் கூட்டு**
அதில், “விக்கிரவாண்டி இடைத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற தேர்தல் நாளன்று வாக்குப் பதிவு தொடங்கி, தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொதுவான வாக்காளர்கள் ஆளுங்கட்சியின் மீது அச்சம் இன்றி நடுநிலையோடு வாக்களிப்பதை உறுதி செய்ய பதற்றமான வாக்குச் சாவடிகளில் போதுமான அளவு துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
ஆளுங்கட்சியான அதிமுக தொகுதிக்கு வெளியே இருக்கும் சமூக விரோதிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு வன்முறையை கையிலெடுத்து, அதன்மூலம் பதற்றமான வாக்குச் சாவடிகளை கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது. மேலும், மாநில காவல் துறையின் மறைமுக உதவியோடு தாங்கள் நினைக்கும் காரியத்தை அவர்கள் நடத்த முயற்சிக்கலாம். இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தேர்தல் ஆணையம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையெனில், அது தேர்தல் ஜனநாயகத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
**நேரடி ஒளிபரப்பு**
தொடர்ந்து அந்த மனுவில், “பதற்றமான வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு முடியும் வரை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். முழு தேர்தல் நடைமுறைகளையும் வேட்பாளர்கள் மற்றும் பொது வாக்காளர்கள் பார்ப்பதன் மூலம் ஆளுங்கட்சியின் இடையூறு இல்லாமல் தேர்தல் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையத்தின் மீது அவர்கள் மனதில் ஒரு நம்பிக்கை ஏற்படும்” என்று குறிப்பிட்டுள்ள ஆர்.எஸ்.பாரதி
சாதாரண வாக்குச் சாவடிகளை காட்டிலும் பதற்றமான வாக்குச் சாவடிகளில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும், அதன்மூலம் தேர்தல் நடைமுறைகளை எவ்வித இடைவெளியும் இல்லாமல் முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
**அதிமுக விநியோகிக்கும் பூத் சிலிப்**
மேலும், “அரசு எந்திரத்தை ஆளுங்கட்சியினர் தவறாக பயன்படுத்தவோ அல்லது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடவோ அதிக வாய்ப்புள்ளது. இதுபோன்ற செயல்களை தடுக்க போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் நோக்கத்துடன் ஆளுங்கட்சியான அதிமுக தொகுதி முழுவதும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பூத் சிலிப்களை விநியோகித்து வருவதாக அறிந்துள்ளோம். புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட பூத் சிலிப்புகளை வழங்கும் அதிகாரி, ஆளுங்கட்சியான அதிமுகவின் சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவளிக்கிறார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.�,