நிலாவுக்கு இஸ்ரோவால் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் பற்றி முதல் முறையாக அரசு அதிகாரபூர்வ விளக்கம் அளித்துள்ளது.
செப்டம்பர் 7ஆம் தேதி நிலாவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் – 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின் போது, 2.1 கிலோமீட்டர் தொலைவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது. வெறும் 14 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் கொண்ட லேண்டரை தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் தரையிறங்கியதா இல்லையா என்பது குறித்து அறிந்து கொள்ள இந்தியாவுக்கு நாசா உதவுவதாக அறிவித்து இருந்தது. அதுவும் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், விக்ரம் லேண்டர் பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. விண்வெளித் துறையை கவனிக்கும் பிரதமர் அலுவலகத்தின் இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நவம்பர் 20 ஆம் தேதி, எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், “ விக்ரம் லேண்டர் அதன் தரையிறக்கத்தின் போது வேகத்தைக் குறைப்பதற்கான வடிவமைக்கப்பட்ட அளவுருக்களுடன் பொருந்தவில்லை” என தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட தரையிறக்கம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 30 கிமீ உயரத்தில் இருந்து 7.4 கிமீ வரை செய்யப்பட்டது. வேகம் வினாடிக்கு 1,683 மீட்டர் என்பதில் இருந்து, வினாடிக்கு 146 மீட்டர் என்பதாகக் குறைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட தரையிறக்கத்தின்போது போது, திசைவேகத்தின் குறைப்பு வடிவமைக்கப்பட்ட மதிப்பை விட அதிகமாக இருந்தது. இந்த விலகல் காரணமாக, விக்ரம் நிர்ணயிக்கப்பட்ட தரையிறங்கும் இடத்திலிருந்து 500 மீட்டருக்குள் கடுமையான நிலையை சந்திக்க வேண்டியதாகிவிட்டது” என்று அமைச்சர் மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் கூறினார் ஜிதேந்திர சிங்.
இருப்பினும், ஏவுதல், சுற்றுப்பாதை , லேண்டர் பிரித்தல், டி-பூஸ்ட் மற்றும் கடினமான பிரேக்கிங் கட்டம் உள்ளிட்ட தொழில்நுட்பtத்தின் பெரும்பாலான கூறுகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன என்று ஜிதேந்திர சிங் கூறினார்.
�,”