மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 4500 பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பல்வேறு நவீன சிகிச்சை முறைகளை இன்று (நவம்பர் 9) தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், “மருத்துவர்களின் போராட்டம் குறித்து முதல்வரிடம் கூறியுள்ளேன். அரசு அளித்த உறுதியின் படி மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். எம்.ஆர்.பியில் பணிபுரிந்த செவிலியர்கள் 9533 பேர் தமிழக அரசால் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
”காலியிடத்துக்குத் தகுந்தவாறு பணி நியமனம் செய்யப்படுகின்றனர். நவம்பர் இறுதிக்குள் 2,345 செவிலியர்கள், 1,234 கிராமப்புற செவிலியர்கள், 90இயன்முறை மருத்துவர்கள் என மொத்தம் 4500 பேர் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது, பின்னர் அதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில் மருத்துவர்களின் போராட்டம் குறித்து முதல்வரிடம் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.�,