oதமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸாகி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
‘அதே கண்கள்’ திரைப்படத்தின் இயக்குநர் ரோஹின் வெங்கடேஷன் இயக்கத்தில் தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’. இந்தப் படத்தை ஈகிள் ஐ புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு டாப்ஸி, கிஷோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெலுங்கு திரைப்படம் ‘அனந்தோ பிரம்மா’வின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்த நிலையில் தற்போது இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு தொலைக்காட்சியில் ‘நான் ரொம்ப ரசிச்ச ஒரு குட்டிக்கதை சொல்கிறேன்’ என்று விஜய் கூறுவது போன்ற காட்சியுடன் டிரெய்லர் தொடங்குகிறது. சிங்கம் படத்தில் சூர்யா பேசும் வசனம், கவுண்டமணியின் வைதேகி காத்திருந்தாள் பட பெட்ரோமாக்ஸ் லைட் வசனம் போன்றவையும் இடம்பெற்றுள்ளது.
காமெடி த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் பேய்களின் அட்டகாசம், யோகி பாபுவின் காமெடி, தமன்னாவின் நடிப்பு என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த டிரெய்லர் தமன்னா ரசிகர்களை மட்டுமின்றி, விஜய், சூர்யா ரசிகர்களையும் ரசிக்க வைத்துள்ளது.�,