மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் விஜய் தீவிரமாக இருந்தபோது, ஸ்கிரிப்டிலேயே இல்லாத சில கேரக்டர்கள் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நுழைந்தனர். யூனிட்டே திரும்பிப் பார்த்தபோதுதான் அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று தெரிந்து அதிர்ந்தனர். ஷூட்டிங்கில் இருந்த விஜய்யை அவரது காரிலேயே சென்னைக்கு அழைத்துச் சென்று ஒன்றரை நாட்களாக ரெய்டு, விசாரணை என அதிரடி செய்தார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.
ரெய்டு, விசாரணை எல்லாம் முடிந்து மீண்டும் நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார் விஜய். தகவல் அறிந்து எந்த அழைப்பும் இல்லாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டுவிட்டனர். கையைத் தூக்கி அவர்களை நோக்கி அசைத்தார். ‘அண்ணா பேசுங்கண்ணா…அண்ணா பேசுங்கண்ணா’ என்று ஏகப்பட்ட குரல்கள் எழுந்தாலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் புன்னகைத்தபடியே கை காட்டிச் சென்றார். தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களை தன்னுடன் சேர்த்து வைத்து விஜய் எடுத்த செல்ஃபி சமூக தளங்களில் வைரலின் உச்சத்துக்கு சென்றது. தன்னை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த சொற்ப பாஜகவினருக்கு, தன் பலம் என்ன என்பதையும் அந்த செல்ஃபி மூலமாகவே காட்டினார் விஜய்.
அப்போதே விஜய்யிடம் அவருக்கு நெருக்கமானவர்கள், ‘அண்ணே… ரசிகர்கள்கிட்ட ரெண்டு வார்த்தை பேசிடுங்கண்ணே…’என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது விஜய், ‘இப்ப வேணாம்… பேச வேண்டிய நேரமும் இடமும் இது இல்ல’ என்று சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் தான் பேச வேண்டிய இடமும் நேரமும் வேறு என்ற முடிவில் இருந்திருக்கிறார் விஜய். அந்த முடிவுக்குதான் இப்போது மாஸ்டர் மாநாடு என்ற உருவத்தில் செயல் வடிவம் கொடுக்கப் போகிறார் என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வட்டாரத்தில்.
விஜய்யின் திரைவாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளில் மிகப் புதிதானது மாஸ்டரில் சந்தித்த பிரச்சினை. படம் வெளிவருவதற்கு முன்பு அல்லது வெளிவந்ததற்குப் பிறகு விஜய்க்கு நேர்ந்த பிரச்சினைகள் பல இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ஏற்பட்ட பிரச்சினைகளுக்குப் பிறகு பலவற்றையும் தூசி தட்டிவருகிறார் விஜய். அவற்றில் ஒன்று தான் அவரது கையிலிருந்து கடந்த ஏழு வருடங்களாக நழுவிச் சென்றுகொண்டிருக்கும் மாநாடு. கடந்த 7 வருடங்களில் விஜய்யின் சார்பாகவும், அவரது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாகவும் எந்த மாநாடும் நடக்கவில்லை.
விஜய்யின் ரசிகர்களாகவும், அரசியல் ரீதியாகவும் இயங்கிவந்த பலருக்கு விஜய் மக்கள் இயக்க அறிவிப்பு பெரிய பூஸ்டைக் கொடுத்தது. ஆனால், இப்போது எவ்வித செயல்பாடும் இல்லாமல் இருப்பதால் அரசியல் களத்தில் ஓரங்கப்பட்டிருக்கிறோம் என்ற புழுக்கத்தில் இருக்கிறார்கள் அவர்கள்.
மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ‘விஜய் செய்துவந்த மக்கள் இயக்கப் பணிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. ஒவ்வொரு முறை ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கிவந்தபோது கிடைத்த மகிழ்ச்சியில், இதையெல்லாம் பெரியளவில் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. நிர்வாகிகள் அளவில் இல்லாமல் ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களின் வீட்டுத் திருமணத்தில் கூட கலந்துகொள்ளத் தொடங்கினார். அந்த சமயத்தில்தான் இளைய தளபதியை, தளபதி என மாற்றி அவரை ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். அதனை விஜய் ஆதரித்ததும் திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலவிதமான மிரட்டல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.
விழுப்புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு திருமணத்தில் விஜய்யை நெருங்கிப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். திருமண மண்டபம் சூறையாடப்பட்டது. அங்கிருந்து திருமண மண்டபத்தின் சுவர் ஏறி குதித்து விஜய் தப்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இது அத்தனை தளங்களிலும் அதிக கிண்டலுக்கு ஆளானது. விஜய் ரசிகர்கள் கட்டுப்பாடற்றவர்கள் என்ற எண்ணம் பொதுவாகவே அனைவரிடத்திலும் ஏற்பட்டது. ஆனால், விஜய்க்கு ரசிகர்கள் மீதிருந்த நம்பிக்கை குறையவில்லை. நம்ம பசங்க எப்படிப்பட்டவங்கன்னு காட்டணும் என உறுதிகொண்டார்.
2013ஆம் வருட விஜய்யின் பிறந்தநாள் வந்தது. ஆகஸ்டு மாதம் ரிலீஸாகவிருந்த ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் வேலைகளும் படு ஜோராக நடந்தது. ரசிகர்களின் கட்டுப்பாட்டினை அனைவருக்கும் காட்டும் விதத்தில், விஜய்யின் 2013ஆம் வருட பிறந்தநாள் கொண்டாட்டத்தை பெரியளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக ஆலந்தூர் பகுதி ரசிகர் மன்றத்தின் சார்பில், மீனம்பாக்கத்திலுள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் அனுமதி பெறப்பட்டு மாநாடு வேலைகள் தொடங்கின. ரசிகர் மன்றத்தினர் அனைவரும் ஒரே மாதிரியான உடையணிந்து ராணுவ கட்டுப்பாட்டுடன் மாநாட்டை நடத்திமுடிக்கவேண்டுமென கட்டளை கொடுக்கப்பட்டது.
அதற்குத் தயாராகிக்கொண்டிருந்த ரசிகர்கள், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் டைட்டில் மற்றும் படங்கள் வேண்டுமென்று மிகவும் வற்புறுத்தினார்கள். அதன்பேரில், படத்தின் டைட்டிலையும் படங்களையும் படக்குழு ரிலீஸ் செய்தது. தளபதி என்ற பெயருக்கே அந்த ஆட்டம் போட்டவர்கள் ‘தலைவா’ என்ற டைட்டிலுக்கு என்ன செய்யமுடியுமோ செய்துகொள்ளட்டும் என்ற மனநிலையில் அந்த டைட்டிலுக்கு டிக் அடித்திருந்தார் விஜய்.
ஆனால், இம்முறை அதிமுகவின் தலைமையிடமிருந்து வந்தது. ‘தலைவா’ என்ற டைட்டில் ஏற்படுத்திய தாக்கத்தால் அந்த மாநாட்டினை ஜெயலலிதா தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியது. டைம் டு லீடு என்ற சப் டைட்டிலும் தன் பங்குக்கு சர்ச்சையைக் கிளப்பியது. அதிமுக அரசின் அதட்டலால் கல்லூரி நிர்வாகத்தினர் திடீரென மாநாட்டினை நடத்தக் கொடுத்திருந்த அனுமதியினை திரும்பப்பெற்றனர். விஜய் நேரடியாகவே கல்லூரி நிர்வாகத்திடம் இரவு 11 மணியளவில் சென்று பேசியும் அப்போது மாநாட்டை மீட்டெடுக்கமுடியாமல் போய்விட்டது.
அதன்பிறகும் தாக்குதல் தொடர்ந்தது. கொடநாடு வரை சென்று, ஒரு வீடியோ வெளியிட்ட பின்னரே தலைவா திரைப்படம் ரிலீஸானது. அதன்பின் மக்கள் இயக்கத்தின் சார்பில் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் எவ்வித இயக்க செயல்பாடுகளிலும் விஜய் ஈடுபடவில்லை. மக்கள் இயக்கத்திலிருந்து ரசிகர்கள் பெருமளவில் வெளியேறிய பிறகே ஒவ்வொரு மாவட்ட ரசிகர்களையும் அழைத்து அவர்களுடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் முறையை விஜய் அறிமுகப்படுத்தினார். இதனால் ஓரளவுக்கு ரசிகர்கள் ஆறுதலடைந்தனர்.
இப்போது ரஜினி அரசியல் ரீதியாக நடத்தவிருக்கும் மாநாட்டுக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஏழு ஆண்டுகளாக நடக்காமல் இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநாட்டை இந்த வருடம் நடத்த வேண்டுமென்று ஆங்காங்கே தீர்மானங்கள் போடப்பட்டு விஜய்க்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் எதிரொலி மாஸ்டர் இசை வெளியீடு நிகழ்ச்சியில் தெரிய வாய்ப்பிருக்கிறது’என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் செல்லமுடியாமல், டிக்கெட் வாங்கியும் விஜய்யை பார்க்கமுடியாமல் அவதிப்பட்டவர்கள் நிறைய பேர். எனவே, இம்முறை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாகவே இசை வெளியீட்டு விழாவை நடத்திவிடலாமா என்ற ஆலோசனை நடைபெறுகிறது. அதிலும், நிகழ்ச்சியை சென்னையில் நடத்தாமல் கோயமுத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடத்தலாம் என ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. பல கிலோமீட்டர்கள் பயணித்து வந்தும் பிகில் இசை வெளியீட்டில் கலந்துகொள்ள முடியாத தென் மாநிலங்களிலிருக்கும் விஜய் ரசிகர்கள் எளிதாக வரக்கூடிய இடமாக இருக்கவேண்டுமென்று கோயமுத்தூர் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்ட பிறகு தான், இதனை கார்ப்பரேட் விழாவாக நடத்துவதா இல்லை ரசிகர்களின் துணையுடன் நடத்துவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்கின்றனர் விழா ஏற்பாடு குறித்து ஆலோசனை வழங்கிவருபவர்கள். மார்ச் 10ஆம் தேதிக்குள் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்திவிடவேண்டும் என்று ஒரு பொதுவான முடிவுக்குள் வந்திருக்கிறது படக்குழு. இன்னும் 15 நாட்களுக்குள் விஜய் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்த்த பிறகு தான் எதுவும் தெரியும் என்கின்றனர் அவரது அரசியல் வருகைக்காகக் காத்திருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.�,