Hவிஜய்யின் அடுத்த டார்கெட்!

Published On:

| By Balaji

‘தளபதி 64’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியைத் தொடர்ந்து இளம் மலையாள நடிகரான அங்கமாலி டைரீஸ் புகழ் ஆண்டனி வர்கீஸ் இணைந்துள்ளார்.

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். ‘தளபதி 64’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்களை செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 2 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, தினமும் 5 மணிக்கு வெளியிட இருப்பதாகப் படக்குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் தகவலைப் படக்குழு நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) அறிவித்தது. இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் ‘தளபதி 64’இல் இணைந்துள்ளார் என்று படக்குழு நேற்று (அக்டோபர் 1) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவர், கடந்த 2017ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அங்கமாலி டைரீஸ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் திரைப்படத்துக்காகவே இவர் பல பிலிம்பேர் விருதுகளைப் பெற்றிருந்தார். மலையாளத் திரைப்பட உலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் இவர், தற்போது ‘தளபதி 64’இல் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

தமிழகம் போன்றே கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கேரளாவில் இளவயதினரை மட்டுமின்றி குடும்ப ரசிகர்களையும் விஜய் பெருமளவில் சம்பாதித்துள்ளார். அவர்களையும் கவர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மலையாள சினிமாவின் அடையாளங்களுள் ஒருவரான மோகன்லால், ஜில்லா திரைப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டார். அதன்பிறகு கேரள ரசிகர்களுக்காகத் தனது திரைப்படங்கள் மூலமாகத் தனிப்பட்ட முறையில் எதுவும் செய்யாமலிருந்த விஜய், இப்போது தளபதி 64 திரைப்படத்தின் மூலம் மீண்டும் கேரள ரசிகர்களை டார்கெட் செய்துள்ளார். அதன் காரணமாகத்தான் மலையாளத்தின் வளர்ந்துவரும் இளம் நடிகரைத் தன் படத்தில் நடிக்க வைக்கிறார் என்று கூறுகிறார்கள்.

விஜய்யின் 64ஆவது படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கவுள்ளார். இன்று 5 மணிக்கு வெளியாகவிருக்கும் தளபதி 64இன் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share