சாதாரண கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய பாபி சிம்ஹாவுக்கு ஹீரோயிசத்தைக் கையில் கொடுத்தது ஜிகர்தண்டா. அந்த கேரக்டரை விஜய் சேதுபதி உதறியபோது, பாபி சிம்ஹா பயன்படுத்திக்கொண்டார். அதேபோன்றதொரு சூழல் இப்போதும் உருவாகியிருக்கிறது.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘உங்கள் நான்’ நிகழ்ச்சி பல்வேறு விதமான கலந்துபட்ட உணர்வினைக் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட உணர்வில் நிகழ்ச்சி முழுக்க உட்கார்ந்திருந்தவர் விஜய் சேதுபதியாகவே இருந்திருப்பார். காரணம், மேடையேற்றி பேசச் சொன்னதும் கமலிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, இன்னொரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டார்.
கமலின் விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி “உங்கள் யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்றை நான் சொல்கிறேன். எனக்கு இந்தியன் 2 படத்தின் ஒரு கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில காரணங்களால் அந்த கேரக்டரில் நடிக்கமுடியாமல் போய்விட்டது. இந்த வாய்ப்பை பறிகொடுத்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். எனக்கு உங்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்” என்று வெளிப்படையாகவே கமலிடம் கேட்டார். அதற்கு வழக்கம்போலவே ஒரு புன்னகையை மட்டும் கமல் கொடுத்தார்.
விஜய் சேதுபதி தனக்கு வரும் ரோல்களை சில காரணங்களுக்காக கைவிடுவது இது புதிதல்ல. கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா படத்தின் சேது கேரக்டர் அவர் நடிக்கவேண்டியது. ஆனால், அவர் வேண்டாம் என்று கூறியதால் பாபி சிம்ஹா அந்த கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு பாபி சிம்ஹாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்தது. அதேபோல, இப்போதும் விஜய் சேதுபதி கைவிட்ட இந்தியன் 2 கேரக்டரில் பாபி சிம்ஹா நடிக்கிறார். ஆம், இந்தியன் 2 திரைப்படத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் போலீஸ் கேரக்டர் தான் விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படம் மற்றும் அல்லு அர்ஜூன் திரைப்படம் ஆகியவற்றில் வில்லனாகவும், இந்தியில் ஆமிர் கான் திரைப்படத்தில் அவருக்கு நண்பராகவும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் விஜய் சேதுபதி. எனவே, கால்ஷீட் இல்லாமல் விஜய் சேதுபதியால் கமல் படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டது என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
�,”