தீபாவளி பண்டிகையையொட்டி விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய இரு படங்களும் அக்டோபர் 25 அன்று ரிலீஸாகின்றன. இரண்டு படங்களுக்கும் நேற்றைய தினம் முதல் தமிழகம் முழுவதும் முன்பதிவு தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் 550 திரைகளில் பிகில் படமும், 275 திரைகளில் கைதி படமும் திரையிடுவதற்காக படத்தை வாங்கிய ஏரியா விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்தப் பணி அக்டோபர் 24 இரவு வரை தொடரும்.
பண்டிகை காலம் மற்றும் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் நாட்களில் முதல் நாள் அதிகாலை காட்சி, நள்ளிரவு காட்சி என்று சிறப்பு காட்சிகள் ரசிகர்களுக்காக திரையரங்குகளில் ஏற்பாடு செய்யப்படும்.
முதல் நாள், முதல் காட்சி தனது அபிமான நடிகரின் படத்தைப் பார்ப்பதற்கு எல்லா நடிகர்களுக்கும் தனியாக ஒரு கூட்டம் தமிழகத்தில் உண்டு. இவர்களின் ஆர்வத்தையும், வேகத்தையும் திரையரங்குகள் தங்களுக்கு சாதகமாக வசூல் வேட்டை நடத்துவதற்கு பயன்படுத்திக்கொள்வது காலம் காலமாக நடந்து வருகிறது.
முதல் நாள் படம் பார்ப்பதற்கு என்ன விலை கொடுத்தாவது டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் தீவிரமான முயற்சி மேற்கொள்வார்கள். இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் முதல் நாள் அனைத்து காட்சிகளுக்கும் 70% டிக்கெட்டுகளை திரையரங்கு மேனேஜர் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து வைத்துக் கொள்வது நடைமுறையில் உள்ளது.
டிக்கெட் தேவை, ரசிகர்களின் ஆர்வம், வேகம் இவற்றுக்கு ஏற்ப விலை இருமடங்கு, மும்மடங்கு அதிகரித்து விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. சில திரையரங்குகளில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் மொத்த டிக்கெட்டையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு ஒரு டிக்கெட் ரூபாய் 500 முதல் 1500 ரூபாய் விலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்துவிடுவார்கள்.
புறநகர் பகுதிகளில் முதல்நாள் ஐந்து காட்சிகளுக்கான மொத்த டிக்கெட்டை ரசிகர் மன்றங்களுக்கு இருமடங்கு விலை வைத்து விற்பனை செய்து விடுவார்கள். அதனை ரசிகர் மன்ற நிர்வாகிகள் தங்களது மன்ற உறுப்பினர்களுக்கு வாங்கிய விலையை விட சற்று கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வார்கள். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது அபிமான நடிகரின் படம் திரையிடப்படும் திரையரங்குகளில் தோரணம் கட்டவும், பட்டாசு வெடிக்கவும் செலவு செய்வார்கள்.
நேற்று காலை பிகில் படத்திற்கான முன்பதிவு தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் அப்படம் திரையிடுவதற்கு சென்னை நகரில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து திரையரங்குகளின் டிக்கெட்டுகளும் முன்பதிவில் விற்பனையாகிவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது முன்பதிவு மூலம் பிகில் படத்திற்கு டிக்கெட் வாங்க முயற்சிப்பவர்களுக்கு அக்டோபர் 28 திங்கட்கிழமை காட்சிகளுக்கு மட்டுமே டிக்கெட் இருப்பதாக கம்ப்யூட்டர் திரை காண்பிப்பதாக கூறுகின்றனர்.
சிறப்புக் காட்சி திரையிடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்கான முயற்சியை திரையரங்கு உரிமையாளர் மற்றும் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை நகரில் பல திரையரங்குகளில் அதிகாலை காட்சி டிக்கெட் விற்பனையை அதிகாரபூர்வமாக ஆன்லைனில் தொடங்கி மொத்த டிக்கெட்டையும் திரையரங்கு நிர்வாகங்கள் பிளாக் செய்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதாக ரசிகர்கள் குற்றம் சுமத்த தொடங்கியுள்ளனர்.
சென்னை நகரம் நிலை இப்படி என்றால் புறநகர் பகுதிகளில் தென்மாவட்டங்களில் பிகில் திரைப்படத்தைவிஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், விநியோகஸ்தர்களிடம் மினிமம் கியாரண்டி முறையில் ஒப்பந்தம் செய்துகொண்டு அந்தந்த ஊர்களில் உள்ள தியேட்டர்களில் வாடகை அடிப்படையில் படத்தைத் திரையிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் குறுகிய காலத்திற்குள் குறிப்பிட்ட லாபத்தை எடுப்பதற்கான தொழிலாக சினிமா மாறி வரும் போக்கு தென்மாவட்டங்களில் அதிகரித்து வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். விஜய் நடித்த சர்கார் கடந்த வருடம் தீபாவளியன்று வெளிவருவதற்கு முன்பே கதைத் திருட்டு வழக்கில் சிக்கி அகில இந்திய அளவில் அப்படம் கவனிக்கப்பட்டது.
அதனால்அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், பொது வெளியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டதால் படத்தைத் திரையிடுவதற்கு திரையரங்குகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டது. அதுபோன்ற சூழல் திரையரங்குகள் மத்தியில் பிகில் படத்திற்கு இல்லை என்கின்றனர். அதேநேரம் ரசிகர்கள் மத்தியில் முதல் நாளே படத்தை பார்த்து விடுவதற்கான ஆர்வம் அதிகரித்து வருவதாக திரையரங்குகள் தரப்பில் கூறப்படுகிறது.
எங்கள் விருப்பப்படி சதவீதம் கொடுத்தால் மட்டுமே பிகில் படத்தைத் திரையிடுவோம் என்று கலகக் குரல் எழும்பி இருக்கிறது. “கரூர் திரையரங்குகளில் மினிமம் கேரண்டி அடிப்படையில் அதிக விலைக்கு படத்தை வாங்கியுள்ளேன். 70% கொடுத்தால் கரூர் தியேட்டர்களில் படம் ரிலீஸாகும். இல்லையென்றால் கரூரில் பிகில் ரிலீஸ் இல்லை” என்கிறார் திருச்சி விநியோகஸ்தர்.
திரையரங்கு சிண்டிகேட் அமைப்பின் தாயகத்தில் என்னதான் நடக்கிறது?
நாளை காலை 7 மணி அப்டேட்டில்…
-இராமானுஜம்.
�,”