9பிகில் வசூல் சாதனையா?

public

2019ஆம் ஆண்டில், இதுவரை தமிழில் வெளியான படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். அதேபோன்று அதிகமான சர்ச்சைகளையும் ஏராளமான எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்திய படமும் பிகில்தான்.

சுமார் 100 கோடியில் தயாரிக்கப்பட்டு வெளியான மெர்சல், சர்கார் ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாக தமிழகத்தில் நிகழ்த்திய சாதனையை பிகில் படம் முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நீண்ட போராட்டம் நடத்தி சிறப்புக் காட்சி திரையிடுவதற்கு தயாரிப்பாளர் தரப்பில் சிறப்பு அனுமதி வாங்கியும் பிகில் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் மொத்த வசூலில் 22 கோடியைக் கடக்க முடியவில்லை. ஏற்கனவே இதேபோன்ற தீபாவளி நாட்களில் வெளியான மெர்சல் 23.70 கோடியும், சர்கார் 31.7 கோடி ரூபாயும் முதல் நாளில் வசூல் செய்தன. முந்தய படங்களின் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகிறபோது பிகில் திரைப்படம் சுமார் 40 கோடி ரூபாய் முதல் நாள் வசூலாக பெற்றிருக்க வேண்டும்.

அதிகமான திரையரங்குகளில் இப்படத்தைத் திரையிட்டனர். முந்தய விஜய் படங்களை காட்டிலும் அதிக விலைக்கு பிகில் திரைப்படம் விற்பனை செய்யப்பட்டிருந்தது. அதனால், முதல் நாளில் அதிகபட்ச வசூலையும், அடுத்து வரும் மூன்று நாட்களில் உச்சபட்ச வசூலை எட்டி விடவேண்டும் என்று திரையரங்குகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், அனைவரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்ததே தவிர உயரவில்லை. இந்தப் படத்தின் பட்ஜெட் அடிப்படையில் இந்த வசூல் என்பது குறைவுதானே என்ற கேள்வியை திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் மத்தியில் முன்வைத்தபோது, ‘இல்லை’ என்கின்றனர்.

மெர்சல், சர்கார் இரண்டும் தீபாவளியன்று வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பு அந்த படங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. அதனையொட்டி அந்தப் படங்களுக்கு மீடியா வெளிச்சம் அதிக அளவில் கிடைத்ததும் ஒரு காரணம். இதுபோன்ற எந்த ஒரு புறக்காரணிகளும் பிகில் படத்திற்குக் கிடைக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நடிகர் விஜய் படங்களுக்கென்ற குறைந்தபட்ச வசூல், தெறி படம் தொடங்கி இன்றுவரை ஒரே அளவு சமச்சீராக இருந்து வருகிறது. அந்த அடிப்படையில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் நியாயமான வசூல் என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். பிகில் படத்தை பற்றி இயக்குநர் அட்லீ, ‘இது விஜய் ரசிகர்களுக்கான படம் என்று அடிக்கடி கூறி வந்திருக்கிறார்.’ இது ‘மக்களுக்கான படம்’ என்று எப்போதும் கூறவில்லை. தமிழகத்தில் நடிகர் விஜய்க்கு இருக்கக்கூடிய ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டனர் என்றுதான் கூற வேண்டும். ஒரு திரைப்படம் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்ற பொழுதுதான் அந்தப் படத்தினுடைய வசூல் அதிகரிக்கும். பொதுமக்கள் படத்தை பார்க்க திரையரங்குக்கு வருவார்கள்.

அதனால் தான் மெர்சல், சர்க்கார் இரண்டு படங்களும் தமிழகத்தில் வசூலில் சாதனையை நிகழ்த்த முடிந்தது. அந்த சாதனையை பிகில் சமன் செய்யுமா முறியடிக்குமா என்பதை இந்த வார இறுதியில் தான் முடிவு செய்ய முடியும் என்கின்றனர். கடந்த நான்கு நாட்களில் தமிழகத்தில் பிகில் 66 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *