வெட்டியான்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

தொடர்ச்சி…

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் “அல்யோன்ஸ் ப்ரான்ஸே” ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டில் ஃப்ரெஞ்ச் மொழி கற்றுக்கொள்ளப் போன நான், அதன் வாயிலாக ஃப்ரான்ஸ் நாட்டின் “போர் தே போஃ” என்னும் நகரில், 93 நாடுகள் கலந்து கொண்ட குறும்படப் போட்டிக்கு அதனை அனுப்பி வைத்தேன்.

சர்வதேச போட்டிக்கு அனுப்புகிறோம் ஆங்கிலத்தில் டைட்டில் வைப்போம் என்று ஆலோசனை சொன்னார்கள் என் யூனிட்டில் இருந்தவர்கள்.

“இல்லை, விருதொன்று கிடைத்தால் அது தமிழுக்குக் கிடைத்ததாக இருக்கட்டும்…” என்று தமிழிலேயே “வெட்டியான்” எனப் பெயர் சூட்டி அனுப்பினேன்.

முடிவில், சர்வதேச அளவில் ஆறு ஜூரிகள் இணைந்து முடிவெடுத்து “சிறந்த இயக்குனர்” என்னும் சர்வதேச விருதை எனது “வெட்டியான்” குறும்படத்துக்கு அளித்தார்கள்.

முதல் முதலாக, குறும்படத்துக்கான சர்வதேச விருதை இந்தியாவுக்காக வென்றது “வெட்டியான்” என்னும் எனது குறும்படம். தமிழகத்தின் அத்துனைப் பத்திரிகைகளும் ஓங்கி ஆதரித்து வாழ்த்தி மகிழ்ந்தது.

“வெட்டியான்” குறும்படத்தில் பங்கு பெற்ற வெட்டியான் பெருமக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், சென்னை மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் ஓர் பாராட்டு விழாவை எடுத்தோம்.

வந்திருந்த 7 வெட்டியான் பெருமக்களுக்கும், வேத மந்திரங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மேடையில், மாலையும், பொன்னாடையும் சார்த்தப்பட்டது.

விழாவில், 70 வயதான “பூ சாமி” என்னும் வெட்டியான் பேசும் போது கண் கலங்கி நின்றார்.

“எங்க வாழ்கையில மொத மொறையா ஒரு நல்ல காரியத்துக்கு வந்திருக்குறோம். ஆமா, நல்ல காரியத்துக்கு யாரும் எங்களை அழைக்க மாட்டாங்களே…ரொம்ப பெருமைப் படுத்திட்டீங்க….எல்லாருக்கும் நன்றி” என்றார்.

நிறைந்த அரங்கம் ஆழ்ந்த அமைதிக்குப் போனது. சாட்டையடி வாங்கியது போல அவரது நன்றியை உள்வாங்கி நின்றது. அதில் அர்த்தம் இருந்தது.

அதன் பின்னர், திமுக ஆட்சியில் வெட்டியான்களுக்கு அரசாங்க ஊதியம் வழங்கப்பட்டு விட்டது என்றாலும் கூட, இன்றும் அவர்கள் தங்களுக்கு உரிய நியாயமான கௌரவத்தோடு நிறைந்து இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது.

அவர்களுக்குப் போதுமான பொருளாதார பாதுகாப்பு இல்லை. நகரத்தில் ஓரளவு பரவாயில்லை என்றாலும் கிராமப் புறங்களில் அவர்கள் இன்னமும் மதிக்கப்படுவது இல்லை.

சகல விதங்களிலும் புறக்கணிக்கப்படுவதால் அவர்களிடையே மேலோங்கி நிற்கும் உளைச்சலும், அது குறித்த அவர்களின் மன அழுத்தமும் சொல்லி மாளாதது.

அதனாலேயே அவர்களில் 90 சதவிகிதம் பேர் ஓர் கொடும் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கின்றார்கள். அது, மது !

ஓயாமல், குடிக்கிறார்கள். சாப்பாட்டு நேரங்களில் வந்து சேர்ந்து விடும் பிணங்களுக்காக, தங்கள் உணவைக் கூட தவிர்த்து விட்டு “வேலை மேல்” இறங்கி விடுகிறார்கள்.

ஒரு நாளைப் போல அவலச் சத்தம் அவர்களின் காதுகளை நிரப்புகின்றது. உறவை இழந்த மானுடக் கூட்டத்தின் ஓலக் குரல் வெட்டியான்களின் ஆழ் மனதை அவர்கள் அறியாமலேயே அன்றாடம் கீறிக் கொண்டிருக்கின்றது.

இறந்து பிறந்த குழந்தையை சுமந்து வரும் தகப்பனின் இறுகிய முகத்துக்குப் பின்னால் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் எரிமலைக் குழம்பு அவர்களின் ஆழ் மனதில் பாய்ந்து பொசுக்குகின்றது.

பல்லாண்டுக் காலம் தன் ஊணில், உயிரில் கலந்துபோன மனைவியை புதைக்க வரும் வயதான கணவனின் கோணிய வாயில் ஒழுகும் எச்சில், வெட்டியான்களின் கண்களை துன்புறுத்தாமல் இருக்காது.

பிணமாகி வந்தவர், உயிரோடு இருந்த போது சேர்த்து வைத்த சொத்துக்காக, சுயநல ஈகோவுக்காக, பழைய உறவுப் பகைக்காக எனப் பற்பல காரணங்களை முன் வைத்து, மரணக் கொட்டகையின் வாயிலிலும் கூட, ஆவேசமாக அடித்துக் கொள்ளும் பாழும் மனிதர்களை அவர்கள் அன்றாடம் காண வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகிறார்கள்.

**அவர்களும் மனிதர்கள் தானே ?**

மன அழுத்தம் மேலிட தத்தளிக்கும் அவர்களுக்கு, இது போதாதென்று போலீஸ் வடிவிலும் அழுத்தம் வருகிறது. அழுகிய அனாதைப் பிணங்களை புதைக்க சொல்லி எடுத்து வரும் போலீஸ், அந்த கொடும் நாற்றத்தை சகித்துக் கொள்ள, பாட்டில் பாட்டிலாக இலவச மதுவையும் கொடுத்து விடுகின்றது.

மொத்தத்தில், சகல காரணம் பற்றியும் குடித்துக் குடித்தே அழிகின்றார்கள் வெட்டியான்கள்.

அவர்களை இந்த சமூகம் காப்பாறியே ஆக வேண்டும். விட்டுக் கொடுத்து விடலாகாது.

“நல்லோர் ஒருவர் உளரேல்; அவர் பொருட்டு

எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்றார் திருவள்ளுவப் பேராசான்.

வெட்டியான்களைப் போன்ற நல்லோரை நம் சமூகம் உணர்ந்து, புரிந்து ஏற்றுக் கொண்டாக வேண்டும். அவர்களைக் காப்பாற்றியே ஆக வேண்டும்.

அவர்களை, இந்த சமூகமும், அரசாங்கமும் பல வழிகளிலும் அரவணைத்தாக வேண்டும்.

குடிப் பழக்கத்தில் இருந்து வெட்டியான் பெருமக்கள் மீண்டு வர இடை விடாமல் “கவுன்ஸிலிங்” கொடுக்க இந்த அரசாங்கம் ஏற்பாடு செய்தாக வேண்டும்.

ஓமப் புகை நல்லது ; ஈமப் புகை கெட்டது என்பார்கள்.

இந்த சமூகத்துக்காக, ஈமப் புகை மத்தியிலேயே வாழும் அவர்களின் ஆரோக்கியத்தைக் குறித்து இந்த அரசாங்கம் கவலைப்பட்டாக வேண்டும்.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் நல்லெண்ணையும், சோப்பும் தரும் இந்த அரசாங்கம், வெட்டியான்களின் ஆரோக்கியத்துக்கும் ஆவன செய்தாக வேண்டும்.

அவர்களுக்கென்று தனிக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு அதில் அவர்கள் கௌரவமாக வாழ வழி செய்யப்பட வேண்டும்.

அவர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்கப்பட வேண்டும்.

அவர்களின் ஊதியத்தை அதிகரிப்பதால் மாநில பட்ஜெட் ஒன்றும் சரிந்து விடப் போவதில்லை என்பதால் அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

நாடு தழுவிய அளவில், வெட்டியான்கள் அதிக அளவில் அவர்கள் அமர்த்தப்பட்டு, அவர்களின் வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும். அதன் மூலம் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து மீட்டாக வேண்டும்.

மின் எரியூட்டல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, மயானங்களில் எரிக்கும் வழக்கம் பெரும்பாலும் குறைந்து விட்டதுதான். ஆனால், புதைக்கும் வழக்கம் இன்னமும் அப்படியேதான் தொடர்கிறது. மயான ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்றி தீர்வு காண வேண்டும்.

வெட்டியான் சமூகத்தவர்களைக் காக்கத் தவறினால், “பார்ஸி” இனத்து மக்களின் வழக்கம் போல, இறந்த பிணங்களை கழுகுகளுக்கு இரையாக வீசி எறிந்தாக வேண்டிய சூழல் நமக்கும் ஏற்பட்டுவிடக் கூடும்.

வெட்டியான்களுக்கு நாம் மன சாந்தியை தந்தாக வேண்டும்.

“இந்த சமூகத்தில் வெட்டியான்களாகிய நாமும் ஓர் முக்கியமான அங்கம் என்பதை நம் மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்மையும், நம் எதிர்காலத்தையும் அவர்கள் விட்டுக் கொடுத்து விடமாட்டார்கள்…”

என்னும் ஆழ்ந்த நம்பிக்கையை, அவர்களிடையே விதைத்தாக வேண்டும். அது நமது கடமை என்பதை உணர்ந்து, உடனடியாக செய்தாக வேண்டும்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திய எனது வெட்டியான் நண்பன் சம்பத்தைப் பற்றி மேலதிகம் சொல்லாமல் அப்படியே “அம்போ” வென விட்டு விட்டு இந்தக் கட்டுரையை நான் முடிப்பதாகக் கருதி விட வேண்டாம்.

அவன்தான் இன்று, நம்மை “அம்போ” என விட்டு விட்டுப் போய் விட்டான்.

காரணம், ஓயாத மன அழுத்தம். அதனால் கொண்ட ஓயாத குடி.

“வெட்டியான் யுனெஸ்கோ அவார்டு விழா” வில் சம்பத்தை மேடையேற்றி மாலை போட்ட போது மகிழ்ந்த எனக்கு, மன அழுத்தத்தால் குடிக்கு அடிமையாகி, மெலிந்து, நலிந்து, மடிந்து போன சம்பத்தைக் காணப் பிடிக்கவில்லை. ஒரு நல்ல வெட்டியான் எரிக்கப்பட்டு விட்டான்.

ஒரு மனிதன் இறந்து போவது என்பது தவிர்க்க முடியாததுதான்.

ஆனால், அந்த இறப்பை நிம்மதியான இறப்பாக அமைத்து தர வேண்டிய கடமையும், கட்டாயமும் இந்த அரசாங்கத்துக்கும், அவனை சுற்றி உள்ள சமூகத்துக்கும் உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும்.

சம்பத்தின் குடும்பத்துக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களை நன்றியோடு தெரிவித்துக் கொள்வோம்.

அந்த “ஹீரோ” வின் ஆன்மா அமைதி கொள்ளட்டும் !

கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப்பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com

[சிறப்புக் கட்டுரை : வெட்டியான்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2017/10/16/1508092217)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share