வேலூரில் பிரபல தனியார் நகைக் கடை ஒன்றில் சுவரில் துளையிட்டு நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் காட்பாடி சாலையில் தோட்டப்பாளையம் பகுதியில் பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. விற்பனைக்கு பிறகு வழக்கம்போல் நேற்றிரவு 10 மணிக்கு கடை மூடப்பட்டது. இரண்டு இரவு காவலர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில் நகைக்கடையின் பின்புறம் சுவரில் துளையிட்டு கீழ் தளத்தில் உள்ள நகைகளை கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது.
இன்று காலையில் ஊழியர்கள் கடையை திறந்தபோதுதான், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் மற்றும் வேலூர் சரக டிஐஜி பாபு தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையிலிருந்து எவ்வளவு நகைகள் கொள்ளைப்போனது, அதன் மதிப்பு எவ்வளவு என்பது சரியாக தெரியவில்லை. மீதம் இருக்கும் நகைகளை கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி கடையில் இதேபோன்று சுவரில் துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,”