பள்ளித் தலமனைத்தும் வேலு நாச்சியார்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

இது பள்ளிகளின் ஆண்டு விழா சீசன். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்துப் பள்ளிகளும் ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளன.

ஆண்டு விழா என்றால் அது பள்ளி மேடையாக இருந்தாலும் திரை இசைக் குத்தாட்டப் பாடல்கள் இடம்பெறுவது இன்று தவிர்க்க முடியாதது என்ற நிலை இருக்கிறது. பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களே, ‘என் பேரு மீனா குமாரி…’ பாட்டுக்கு அங்க அசைவுகளை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஒத்திகைத் துயரங்களும் பள்ளிகளில் நடக்கின்றன.

ஆனால், ஆண்டு விழா என்ற பெயரில் இப்படிப்பட்ட மலினங்களில் மாணவர்களைச் சிக்கவைக்காமல், மாணவர்களையே கதாபாத்திரங்களாக்கி வேலு நாச்சியார் வரலாற்று நாடகத்தை நடத்தி முடித்துள்ளது பொன்னேரி வேலம்மாள் பள்ளி.

கடந்த வாரம் நடந்த, வேலு நாச்சியார் நாடகத்துக்காக சுமார் பதினைந்து நாள்கள் மாணவர்களைத் தயார் செய்து அவர்களை வேலு நாச்சியார், பெரிய மருது, ஹைதர் அலி என்று அற்புதமான வரலாற்றுப் பாத்திரங்களாக மாற்றி வெற்றிகண்டிருக்கிறார் இந்நாடகத்தை எழுதி இயக்கியவரான ஸ்ரீராம் சர்மா.

“வழக்கமாக என் மனைவி மணிமேகலை அவர்கள்தான் வேலு நாச்சியாராக நடித்து வருகிறார். ஒரு மாற்றத்துக்காகப் பள்ளி மாணவர்களையே வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களையும் வைத்து செய்யலாமே என்ற எண்ணம் கருக்கொண்டு உருக்கொண்டபோது அது சுகமான சவாலாகத் தோன்றியது” என்ற ஸ்ரீராம் சர்மாவிடம், “இதை மாணவர்கள் எப்படி உள்வாங்கிக் கொண்டார்கள்?” என்று கேட்டோம்.

“தினமும் 100 மாணவக் குழந்தைகள் வேலு நாச்சியார் நாடக வசனங்களை உள்ளத்தில் இருந்து உச்சரித்து ஒத்திகையில் ஈடுபட்டார்கள். அந்த பதினைந்து நாள்களும் அவர்கள் வேறொரு உலகத்தில் வாழ்ந்தார்கள். வீட்டுக்குச் சென்று வேலு நாச்சியார் பற்றி பேசியிருக்கிறார்கள். வசனங்களை உச்சரித்து பெருமிதப்பட்டிருக்கிறார்கள்.

வேலு நாச்சியார் என்ற வீர மங்கையின் வாழ்வியலையும், அவள் நடத்திய போராட்டங்களையும் அந்தப் பிஞ்சுகளின் உள்ளத்தில் இருந்து இனி எப்போதும் அழித்துவிட முடியாது என்பதே பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்காகவே இனி வேலு நாச்சியார் போன்று இன்னும் சில நிகழ்த்துக் கலை நாடகங்களையும் செய்யும் எண்ணம் உள்ளது. பள்ளி ஆண்டு விழாக்களில், சினிமா – இரட்டை அர்த்தக் குத்தாட்டப் பாடல்களுக்கு மாணவர்கள் ஆடிக்கொண்டிருக்கும் கொடுமையைத் தடுத்து நிறுத்தி, இந்த மண்ணின் பெருமையை அவர்களின் மனதில் ஆழப் பதியவைத்து, மாணவப் பருவத்தை வளமானதாக்க முடியும் என்று நம்புகிறோம். பள்ளிகள் வாயிலாக நமது வரலாற்றை மீட்டெடுக்கும் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தை இந்த மாணவர்கள் கொடுத்த நம்பிக்கையோடு தொடங்குகிறோம்” என்கிறார் நாடகத்தை எழுதி இயக்கும் ஸ்ரீராம் சர்மா.

பள்ளித் தலமனைத்தும் நிகழ்த்திக்கலை செய்குவோம் என்ற புறப்பட்டிருக்கும் குழுவினருக்கு வாழ்த்துகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel