pதிமுக எம்.பி.யின் குடிநீர் ஆலைக்குச் சீல்!

Published On:

| By Balaji

வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி கதிர் ஆனந்துக்குச் சொந்தமான குடிநீர் ஆலைக்கு நேற்று (மார்ச் 2) சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்றும் அதற்கான அறிக்கையை இன்று (மார்ச் 3) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் ஆலைகளுக்குச் சீல் வைக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களில் 400க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று வேலூர் எம்.பி.யும், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கேன் குடிநீர் உற்பத்தி ஆலைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

காட்பாடி அருகே அருவி என்ற பெயரில் செயல்பட்டு வரும் குடிநீர் ஆலையின் நீர் உறிஞ்சும் பம்புக்கு காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் சீல் வைத்தார்.

அனுமதியின்றி செயல்படும் ஆலைகளுக்குச் சீல் வைப்பது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில், “வேலூரில் பொதுப்பணித் துறை நீர்வள பொறியாளர்கள், வருவாய் துறையினர் அடங்கிய குழு அனுமதி இல்லாத குடிநீர் ஆலைகளைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டது. இதில் மாவட்டம் முழுவதும் 40 ஆலைகள் அனுமதி இன்றி செயல்படுவது கண்டறியப்பட்டது. அதில் 29 ஆலைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது. மீதமுள்ள ஆலைகளுக்குச் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு வேலூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து ஆறாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் போராட்டம் தொடர்ந்தால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share