15 வருடத்துக்கும் மேல் உபயோகத்தில் இருக்கும் நான்கு சக்கர வாகனங்களின் பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கு 5,000 ரூபாயும், 15 வருடத்துக்கு மேல் உபயோகத்தில் இருக்கும் இருசக்கர வாகனங்களின் பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கு 1,000 ரூபாயும் கட்டணம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்களைப் (Registration Certificate) புதுப்பிப்பதற்கான தொகையை உயர்த்தியிருப்பதாகச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதன்படி 15 வருடத்துக்கும் மேல் உபயோகத்தில் இருக்கும் நான்கு சக்கர வாகனங்களின் பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கு 5,000 ரூபாயும், 15 வருடத்துக்கு மேல் உபயோகத்தில் இருக்கும் இருசக்கர வாகனங்களின் பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கு 1,000 ரூபாயும் கட்டணம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் Vehicle Scrappage Policy-யின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து அமலுக்கும் வரும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களுக்கு மட்டுமின்றி வணிகத்துக்காகப் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை புதுப்பிக்கவும், 15 வருடங்களுக்கு மேல் உபயோகத்தில் இருக்கும் வர்த்தக வாகனங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் (Fitness Certificate) பெற எவ்வளவு கட்டணம் எனவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள MINISTRY OF ROAD TRANSPORT AND HIGHWAYS NOTIFICATION அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவுச் சான்றிதழை ஸ்மார்ட் கார்டு வடிவில் பெற 200 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பதிவுச் சான்றிதழைப் புதுப்பிக்கத் தாமதமானால் மாதத்துக்கு 300 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், வர்த்தக வாகனங்கள் தகுதிச் சான்றிதழ் பெறத் தாமதமானால் நாளொன்றுக்கு 50 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**
�,