தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன. அதே ஆண்டு மே 22ஆம் தேதியன்று கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மே 28ஆம் தேதி தமிழக அரசு ஆணையால் இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையின் தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி, சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
இதற்கிடையில் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து, ஆக்ஸிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மூன்று மாத காலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஆலையில் உள்ள இயந்திர உபகரணங்கள் உபயோகத்தில் இல்லாத காரணத்தினால் துருப்பிடிக்கும் அபாயம் இருப்பதால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியது, ஆனால் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இதை வாங்க விரும்புவோர் வரும் ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.