uஸ்டெர்லைட் மூடல் : தொடரும் சட்டப்போராட்டம்!

Published On:

| By Balaji

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் உத்தரவு செல்லும், தற்போதைய நிலையே தொடரும் என்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஆலையைத் திறக்கக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இனி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்ய வாய்ப்புண்டு. முந்தைய வழக்குகளிலும் உயர்நீதிமன்றம் தடை விதிப்பதும், உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுப்பதுவும் நடைபெற்றுள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் தமிழ்மாந்தன் 1996இல் தொடுத்த வழக்கில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அப்பாதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கனகராஜ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர். **அந்த வழக்கில் 23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு** சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி லிபரான், நீதிபதி பத்மநாபன் அமர்வு உத்தரவிட்டது. தலைமை நீதிபதி லிபரான் அமர்வில் இருந்து வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டு, 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை **மீண்டும் இயங்க** நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கின் இறுதித் தீர்ப்பை 28.09.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எலிப் தர்மராவ், நீதிபதி பால்வசந்தகுமார் அமர்வு வெளியிட்டது. ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு 02.04.2013 அன்று வெளியானது. அந்த தீர்ப்பில் **”ஸ்டெர்லைட் ஆலை மூலமாக எழும் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுப்பதற்கும், பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்கவும், சுற்று வட்டாரத்தை வளர்ச்சியடைய செய்வதற்கும் நூறு கோடி ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் ஆலை நிர்வாகம் வைப்பு நிதியாக கொடுத்துவிட வேண்டும். அதிலிருந்து வரும் வட்டி மூலம், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்”** என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.

இப்போதைய வழக்கிலும் (வழக்கு எண் 5783/2019) அது குறித்த விவாதங்கள் நடைபெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்று எதிர் மனுதாரர்கள் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். **பொதுவாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கப்பட்ட போதெல்லாம் இயற்கை விதிகளுக்கு மாறாக, முன் அறிவிப்பு எதுவும் கொடுக்கப்படாமல் ஆலையை மூடிவிட்டார்கள் என்றுதான் வேதாந்தா நிறுவனம் தனது வாதத்தை எடுத்து வைப்பார்கள்.** இந்த வழக்கிலும் அப்படியொரு வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு சார்பில், நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக செய்யப்பட்டுவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஆலை நிர்வாகம் இதனை புதுப்பிக்க விண்ணப்பித்தது. ஏற்கெனவே விதித்திருந்த மாசு கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், 09.04.2018 அன்று, அவ்விண்ணப்பம் (T1/TNPCB/F.0212TTN/RL/28/W&A/2018) நிராகரிக்கப்பட்டது. ஆலையில் உற்பத்தி பணிகள் நடக்கக் கூடாது என்று 12.04.2018இல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அடுத்த உத்தரவு (T1/TNPCB/F.0212TTN/RL/W&A/2018) பிறப்பித்தது. 23.05.2018 அன்று ஆலையை மூடவும் (TS1/TNPCB/F.0212/TTN/RL/W&A/2018), ஆலைக்கான மின் இணைப்பை துண்டிக்கவும்(TS1/TNPCB/F.0212/TTN/RL/EB/2018) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுகளை (TS1/TNPCB/F.0212/TTN/RL/W&A/2018) ஆமோதித்து, காற்று, நீர் பாதுகாப்புச் சட்டங்களின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 28.05.2018 அன்று அரசாணை (GO. (Ms) No. 72) வெளியிட்டார்.

இந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றுதான் ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வாதாடி விட்டு, உச்சநீதிமன்றம் 18.02.2019 அன்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முப்பத்தி ஒன்பது நாட்கள் நடைபெற்ற வாதம், பிரதிவாதங்களைத் தொடர்ந்து, தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று தீர்ப்பு கிடைத்துள்ளது. உயர்நீதிமன்ற வழக்கு விபரம் குறித்து மின்னம்பலம் ஏற்கனவே ஸ்டெர்லைட் அடுத்து என்ன? https://minnambalam.com/public/2020/08/18/14/tuticorin-sterlite-case என்று செய்தி வெளியிட்டுள்ளது.

**மொத்தம் எண்ணூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பாக இருப்பதால், தீர்ப்பின் சாராம்சம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.** தீர்ப்பை இரண்டு மணிக்கு இணையத்தில் வெளியிடுவதாக அறிவித்து விட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசின் குத்தகை நிலத்தில் இருந்து ஆலை அகற்றப்பட வேண்டும். கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. பேரா.பாத்திமா பாபு தொடர்ந்த அந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி பல இடங்களில் பொதுமக்கள் வெடி வெடித்து, இனிப்புகள் பரிமாறி உயர்நீதிமன்றத் தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள். சிலர் தாமிரத் தட்டுப்பாடு வரும் என்ற நிலைப்பாட்டையும் எடுத்துள்ளனர். நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டிய தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டிற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதால், இருபத்தி ஐந்து ஆண்டுகாலப் போராட்டம் மேலும் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share