கடந்த சில ஆண்டுகளில் சிறுதானியங்கள் நகரவாசிகளால் அதிகளவில் விரும்பப்படுகின்றன. சிறுதானிய உணவகங்கள், சிறுதானிய விற்பனைக் கூடங்கள் என்று நகர்ப்புறங்களில் அவற்றின் விற்பனை அதிகரித்து வருவது அதற்கொரு சிறந்த உதாரணம். சமைக்கப்பட்ட உணவை நேரடியாகப் பெறுவது அல்லது சிறுதானியங்களை வாங்கி வீட்டிலேயே சமைத்துக்கொள்வது என்று ஏதாவதொரு வகையில் தங்கள் உணவுமுறையில் அவற்றைச் சேர்த்துக்கொள்ள நகர்ப்புற மக்கள் விரும்புகிறார்கள். நீங்களும் உங்கள் வீட்டிலேயே சிறுதானியத்தைப் பயன்படுத்தி ருசிக்க இந்த வரகு பருப்பு சாதம் உதவும்.
**என்ன தேவை?**
வரகு – 250 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று (நறுக்கவும்)
சாம்பார் பொடி – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
சீரகம் – 2 டீஸ்பூன்
பூண்டு – 7 பல்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.
**எப்படிச் செய்வது?**
வரகு, துவரம்பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஒன்றாக ஊறவைத்துக் களைந்து வைக்கவும். சீரகம், பூண்டு, கறிவேப்பிலை மூன்றையும் மிக்ஸி ஜாரில் ஒன்றாகப் போட்டு, தண்ணீர்விடாமல் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சிறு குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்து தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, ஒன்றிரண்டாக அரைத்த சீரகக் கலவை, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி தேவையான உப்பு சேர்க்கவும். பிறகு ஒரு பங்கு வரகுக்கு மூன்று பங்கு என்கிற கணக்கில் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த வரகு பருப்புக் கலவையைப் போட்டு, குக்கரை மூடி, மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். வரகு பருப்பு சாதம் ரெடி.
**குறிப்பு **
மற்ற சிறுதானியங்களிலும், அரிசியிலும் இதேபோல் சாதம் செய்யலாம். சூடான வரகு பருப்பு சாதத்துடன் ஒரு ஸ்பூன் நெய்விட்டுச் சாப்பிட்டால் சுவை அள்ளும்.
**[நேற்றைய ரெசிப்பி: சுரைக்காய் சாமை சாதம்](https://minnambalam.com/public/2022/01/03/1/Calabash-rice)**
.�,