yவண்டலூர் பூங்கா: கோடை கால சிறப்பு ஏற்பாடுகள்!

Published On:

| By admin

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கோடையை முன்னிட்டு விலங்குகளை பாதுகாக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோடை வெப்பநிலை அதிகரிப்பால் அனைத்து விலங்குகளுக்கும் அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் வெப்ப நாட்களில் விலங்குகளை பராமரிப்பதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வனவற்றுக்கான தனித்துவமான மற்றும் புதுமையான கோடைக்கால மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து விலங்குகளுக்கும் போதுமான நிழல் மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

நேரடி சூரிய ஒளி ஊடுருவலைத் தடுக்க தேவையான இடங்களில் நிழல் வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. காண்டாமிருகம், யானை, நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி, மனித குரங்கு உள்ளிட்ட பெரிய விலங்குகளுக்கு ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் பறவைகளின் கூட்டுகளுக்கு மேல் மற்றும் பக்கவாட்டில் கோணிப் பைகள் கட்டப்பட்டு, பகலின் வெப்பமான நேரங்களில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. மாமிச உண்ணிகளுக்கு உறைந்த இறைச்சியும், குரங்குகள் மற்றும் கரடிகளுக்கு ஐஸ் கட்டிகளில் உறைய வைத்த பழங்களும் வழங்கப்படுகின்றன.

அதிக வெப்பம் இருக்கின்றப் போதிலும், வண்ணத்துப்பூச்சிப் பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றிற்காக பனித்தூரல் மற்றும் மூடு பனி அமைக்கப்பட்டுள்ளது. பாம்புகளுக்கு பல அடுக்குகளில் மண்மேடு அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பூங்காவிற்கு வருகைத்தரும் பார்வையாளர்களை குளிரூட்டும் விதமாக ‘ஷவர்’ பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாவதற்கு ஒரு மாத காலம் உள்ள நிலையில், ஏற்கனவே இந்த வருட வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இந்த ஏற்பாடுகள் செய்திருப்பது, இரண்டு வருடக் கொரோனா காலம் முடிந்து சென்னைவாசிகள் தங்கள் குடும்பங்களோடு சென்று விலங்குகளை கண்டு களித்து மகிழலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share