வரும் செப்டம்பர் மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் 4 அல்லது 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் புல்லட் ரயில்களுக்கான பணிகளும் தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்தியாவில் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் தவிர, புதுதில்லியிலிருந்து வாரணாசி மற்றும் புதுதில்லியிலிருந்து வைஷ்ணோதேவி கத்ரா வரை, இரண்டு வந்தே பாரத் அதிவேக ரயில்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ஐசிஎஃப்) உற்பத்தியின் இறுதி கட்டத்தில் உள்ளன.
இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளை குறிக்கும் விதமாக நாடு முழுவதும் உள்ள 75 பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் 75 புதிய வந்தே பாரத் ரயில்கள் வரும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அந்த திட்டத்தின் தொடக்கப்புள்ளியாக இந்த அதிவேக ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் சோதனையின் போது மணிக்கு 180 கிமீ வேகத்தில் பயணிக்கிறது.
இதுகுறித்து தேசிய ரயில்வே விருது வழங்கும் விழாவில், வைஷ்ணவ் கூறுகையில், “ரயில்வேயை உலக தரத்திற்கு இணையாக புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். அந்த திட்டத்தின் முதல் பகுதியாக 4 அல்லது 5 வந்தே பாரத் ரயில்களை வரும் செப்டம்பர் மாதம் முதல் இயக்கவுள்ளோம்.” என்று தெரிவித்தார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் சிறந்த ஆற்றல் திறன் கொண்ட 400 புதிய நவீன வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் திட்டத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
.