19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகையில் சொர்க்கவாசல் திறப்பு!

Published On:

| By Balaji

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். குறிப்பாக, மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. வைகுண்ட ஏகாதசி திருவிழா வழக்கமாக மார்கழி மாதம்தான் நடைபெறும்.

ஆனால், 19 ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3 ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரங்கநாதர் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருவார். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.

அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டு ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் கடந்து சென்றார்.

கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் கொரோனா காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பரம்பத வாசல் திறப்பு நிகழ்வுக்கு ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஸ்ரீரங்கத்தில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளதால், திருச்சியில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி பாதுகாப்பு பணியில் 2000க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோபுரங்கள் அமைத்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்த்திகையில் சொர்க்க வாசல் திறப்பு ஏன்?

ஸ்ரீ ரங்கத்தில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தை பிரம்மோற்சவம் ஏற்படுத்தப்பட்ட சமயத்தில், மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், தை முதல் பகுதியில் தைத் திருநாளும் வந்ததால் எதைக் கொண்டாடுவது என்ற கேள்வி எழுந்தது.

அப்போது ஸ்ரீரங்கத்தில் இருந்த மணவாள மாமுனிகள், வைகுண்ட ஏகாதசி (பகல்பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரியபெருமாளின் திருவுள்ளம் கேட்டு, அவர் நியமனத்தின்படி செயல்படுத்தினார். 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்று வரும் என அறிந்து, மாற்றியமைத்து நடைமுறைப்படுத்தினார்.

அதன்படி, இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே அத்யயன உற்சவம் வைகுண்ட ஏகாதசி வைபவம் கார்த்திகை 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 19 அன்று திருக்கைத்தல சேவையும், டிசம்பர் 21 அன்று திருமங்கை மன்னன் வேடுபறி விழாவும் ,டிசம்பர் 23 அன்று தீர்த்தவாரியும், டிசம்பர் 24 அன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையவுள்ளது.

**வினிதா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share