முரசொலி அலுவலகம் நில விவகாரம் தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வைகோ பதிலளித்துள்ளார்.
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்ட அதனை முன்வைத்து திமுக-பாமக இடையே கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், “முரசொலி அலுவலகம் அமைந்துள்ளது பஞ்சமி நிலம் என்றால் அதனை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது திமுகவின் கடமை. இதற்கான ஆதாரங்களை வைகோ ஏற்கனவே வெளியிட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இதற்கு இன்று (அக்டோபர் 24) பதிலளித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ அப்போதைய சூழ்நிலையில் நான் அதுபோன்று கருத்து தெரிவித்து இருக்கலாம். ஆனால் அக்கருத்து தவறானது என்பதை பின்னர் உணர்ந்தேன். தற்போது ஸ்டாலின் மிகத்தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் தான் என்று நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். ஸ்டாலின் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் முரசொலி இடம் குறித்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, அணுக் கழிவு மையம், எட்டுவழிச் சாலை திட்டம் என தமிழ் நாட்டில் பற்றி எரியும் எத்தனையோ பிரச்சினைகளை திசை திருப்ப சிலர் முயல்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய வைகோ, “இதுபோன்ற மத்திய பாஜக அரசின் தமிழ்நாட்டுக்கு எதிரான துரோகங்களை மக்கள் மன்றத்தில் திசை திருப்புவதற்காக திமுக மீது சிலர் உள்நோக்கத்தோடு கணைகள் வீசுவதை தமிழக மக்கள் நன்றாக உணர்வார்கள்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், “பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணையாக இருப்பதையும் தமிழக மக்கள் அறிவார்கள். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டும் ஸ்டாலினின் முயற்சியை எவராலும் தடுத்துவிட முடியாது” என்றும் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
�,